மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு எதிரொலி புதுகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மயில்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில மயில்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி மதுரை  ஐகோர்ட் உத்தரவு எதிரொலியால் நடைபெறுகிறது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இங்கு பலவகையான மரங்கள், மூலிகை செடிகள் போன்றவை இருந்தன. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மயில்கள் இருந்தன.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை தாக்கிய கஜா புயல்,கலெக்டர் அலுவலகத்தையும் புரட்டி போட்டது. இதில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பெரும்பாலான மரங்கள் சாய்ந்தன. மேலும் கஜா புயலுக்கு பிறகு போதிய மழை பெய்யாததால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்கள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்கின்றன.

இதனால் தற்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மயில்கள் மட்டுமே உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகளில் தினமும் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைத்து, அவற்றில் தினமும் தண்ணீர் நிரப்பி மயில்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கிடையில், புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி தனபதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மயில்கள் உள்ளிட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் பயன்பெறும் வகையில், குடிநீர் தொட்டிகளை அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாட்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்கள் உள்ளிட்ட பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே சுமார் 10 இடங்களில் தற்போது சிறிய அளவிலான குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து விவசாயி தனபதி கூறுகையில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்போது தரம் குறைந்து பெயர் அளவிளலே குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த தொட்டிகளில் ஒரு மணி நேரம் கூட நீர் தங்காது. தரமான வகையில் 20க்கு 10 என்ற அளவில் 2 அடி ஆழத்தில் பிரமாண்ட தொட்டிகள் 2 அமைத்தாலே நன்றாக இருக்கும். செய்வதை திருந்த செய்ய வேண்டும் செலவு கணக்கிற்காக செய்ய வேண்டாம் என்றார்.

× RELATED ஸ்ரீபெரும்புதூரில் வாகன உதிரிபாக...