×

மூவாயிரம் ஆண்டுகளாக வழிபாட்டிலுள்ள கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள வனத்தில், கல்வட்ட அமைப்புக்குள்ளாக வித்தியாசமான முறையில், கொம்படி ஆலயம் ஒன்று அமைந்திருப்பதாக அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அளித்த தகவலைத்தொடர்ந்து புதுகோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் மூலம் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் ஏழு கல்வட்டங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் இரண்டு கல்வட்டங்கள் மட்டும் வழிபாட்டிலுள்ளது. இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும் , தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர்  மணிகண்டன் கூறியதாவது,
மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி ஆலயம் பெருங்கற்கால நினைவுச்சின்னமான கல்வட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டிலுள்ளது.

கோயிலின் முக்கிய வழிபாட்டு பகுதியிலிருந்த கல்வட்டம் மற்றும் கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு அதிலிருந்த கற்பலகைகள் கோயிலுக்கு நேர்எ திர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அதன் அருகாமையில் இருக்கும் இரு கல் வட்டங்கள் முழுமையாக சிதைக்கபடாமல் கல்லறை அமைப்புகளுடன் உள்ளது. இதன் மையப்பகுதியில் மரங்கள் மற்றும் கொடிகள் மிகுந்த அடர்த்தியாக காணப்படுகிறது. இப்பகுதியும் துணை வழிபாட்டு அமைப்புகளாக இருக்கிறது.  கோயிலின் வடபுறம் மற்றும் தெற்கு புறங்களில் ஐந்து கல்வட்டங்கள் காணப்படுகிறது. இவைகள் ஐந்து வழிபாட்டில் இல்லை.

இத்தகைய வழிபாட்டு முறை கோயில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது என மூத்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் வட மாவட்டங்களைப்போல தென்மாவட்டங்களில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாட்டில் காணப்படுவதில்லை ஆனால் கொம்படி வேல் வழிபாடும், சுடுமண் சிற்ப வழிபாடும் மிகுதியாக உள்ளது, ஆனால் நெடுங்கல் வழிபாடு , கல் திட்டை வழிபாடு, உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் அற்றுப்போய் கோயில் கட்டுமானங்களாக மாறி விட்ட நிலையில் இக்கோவிலில் மட்டும் கல் வட்டம் , கல் திட்டை வழிபாட்டிலுள்ள நிகழ்கால சான்றாக உள்ளது சிறப்பானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா சத்திரம் , ஆரணிப்பட்டி , ராஜகுளத்தூர் , செங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வட்டத்துடன் கூடிய கல்லறைகள் , கல் பதுக்கைகள் , கல் திட்டைகள் அடையாளம் காணப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு செங்களூர் கல்வட்டதிலுள்ள கல் பதுக்கையை ஆய்வு செய்ததில் கிடைத்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் மணிகளும் கிடைத்துள்ளன. அவற்றை காலக்கணிப்பு செய்ததது பற்றிய எவ்வித குறிப்புகளும் கிடைக்கவில்லை ஆனாலும் இவற்றின் காலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரை பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் பூர்வ காலக்கணிப்புகளின்படி  தற்போது நம்மால் அடையாளம் காணப்பட்ட கல்வட்டத்தின் 3000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதலாம் என்றார்.

Tags : Pudukkottai,Stone circles, Ponnamaravathy,Devotees
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...