×

மின்னணு வாக்கு-ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டால் மறுவாக்குப்பதிவு கோரிய முறையீட்டை ஏற்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மின்னணு வாக்குக்கும், ஒப்புகை சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. 542 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 90 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர், 61.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை(23ம் தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. வழக்கமாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது, மின்னணு வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகள் விரைவாக கணக்கிடப்பட்டு விரைவாக அறிவிக்கப்படும். மாலைக்குள் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற உறுதியாக தகவல் தெரியவரும்.

ஆனால், மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக ஒவ்வொரு சட்டப்பேரைவத் தொகுதியிலும் 5 வாக்குப்பதிவு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒப்புகைசீட்டு எந்திரம் மற்றும் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்கப்படவுள்ளது. அந்த வகையில் 10.30 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் 20 ஆயிரத்து 600 இடங்களில் இவிஎம்-விவிபிஏடி எந்திரங்களை ஒப்பிடும் பணிகள் நடக்க உள்ளன. இந்நிலையில், வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த லட்சுமி கிருபா சார்பில் வழக்கறிஞர் ஸ்வருப், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து 5 வாக்குச்சாவடிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, அங்கு பதிவான ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டால் எவ்விதமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதேபோல், தேர்தல் ஆணையமும் எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை. எனவே, மின்னணு வாக்குக்கும், ஒப்புகை சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அவரது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறி முறையீட்டை ஏற்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் விளக்கம் போதுமானதாக இல்லை என்று கருதினால், உச்சநீதிமன்றத்தை அணுகும்படியும் முறையீடு செய்தவருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


Tags : Court , Electronic Voting, Acknowledgments, Revocative, Chennai High Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...