மலடாகும் மலர்கள் அழிவின் விளிம்பில் தேனீக்கள்

* காப்பாற்ற கோரிக்கை

Advertising
Advertising

பழநி : தேனீக்கள் அழிவின் விளிம்பில் நிலையில் உள்ளதால் மலர்கள் காய்க்காமல் மலடாகி வருகிறது. எனவே தேனீக்களை காப்பாற்ற வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனீக்கள் சுறுசுறுப்பிற்கும், ஒற்றுமைக்கும் பெயர் பெற்றவை. தேனீக்கள் பூக்களில் இருந்து சேகரிக்கும் தேன் சுவை மிகுந்ததாக இருக்கும். மேலும் இந்த தேன் மருத்துவ குணம் வாய்ந்த மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. மரம், செடிகள் தங்களது அடுத்த சந்ததிகளை உருவாக்கிட தேனீக்கள் முக்கிய காரணியாக விளங்குகிறது.

தேனீக்கள் தேன் எடுப்பதற்காக பூக்களில் அமரும்போது அயன் மகரந்த சேர்க்கை நடைபெற்று பூக்கள் காய்களாக மாறுகிறது. தேனீக்கள் தொடர்ந்து இப்பணியை செய்து வருவதால் மரம், செடிகள் உருவாக காரணமான காய்கள் பூக்களில் இருந்து உருவாகிறது. பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்கு தேனீக்கள் அவசியம் ஆகும்.

    தேனீக்கள் அழிந்து போனால் பூக்களில் மகரந்த சேர்க்கை நின்றுபோய், பூக்கள் காய்களாக மாறிட முடியாமல், விதைகள் உருவாகாமல் செடிகள் மலட்டுத தன்மை அடைந்து விடும். போதிய விழிப்புணர்வு இல்லாததால் நண்பனாக பார்க்க வேண்டிய தேனீக்களை, விவசாயிகள் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி அழித்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் தேனீக்களின் இனம் அழிக்கப்பட்டு, பூக்கள் காய்க்க முடியாமலும், தனது சந்ததிகளை மீண்டும் உருவாக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படும். எனவே தேனீக்களை காப்பாற்ற வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேனீக்கள் உற்பத்தியாளர் சதீஷ் கூறியதாவது,  தேனீக்களில் 4 வகைகள் உள்ளன. அவை மலை தேனீ, கொம்பு தேனீ, பாறை தேனீ மற்றும் சிறிய அளவிலான கொசு தேனீக்கள் போன்றவை ஆகும். அனைத்து தேனீக்களின் தேன்களும் பயனுள்ளவை என்றாலும், சிறிய அளவிலான கொசுத்தேனீக்கள் சேகரிக்கும் தேன்வகைகள் மிகுந்த சுவையானதாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனீக்களின் எண்ணிக்கை அதிகளவு இருந்தது.

தற்போது இதன் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. விவசாயிகள் வீரியமிக்க பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணமாகும். தற்போது சந்தையில் 1 கிலோ தேன் ரூ.400 என்ற அளவில் கிடைக்கிறது. விவசாயிகள் தேனீக்கள் வளர்ப்பில்கூட ஈடுபடலாம். தேனீக்கள், மண்புழு போன்ற விவசாயத்திற்கு சாதகமான உயிரினங்கள் இறப்பை தடுக்கு விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பழநி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மகேந்திரன் கூறியதாவது,  தேன் அதிக மருத்துவ குணம் வாய்ந்தவை. சமீபகாலமாக தரமான தேன் கிடைப்பதில்லை. மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கு தேன் சிறந்த மருந்தாக உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் அனைத்து தரப்பினரும் இதனை பயன்படுத்தலாம். தேன் உற்பத்தி குறைவு என்பதால் சந்தையில் கலப்படம் நிறைந்த தேன் வகைகளே கிடைக்கின்றன. எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த தேனீக்களை பாதுகாக்கவும், வளர்க்கவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முன்வர எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: