பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னமான பானையையும் தெருவில் போட்டு உடைத்தனர். இது தொடர்பாக இரு பிரிவினரிடையே வன்முறை வெடித்தது. தேர்தல் நாளில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கலவரம் காரணமாக பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

ஆனால் பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நேரத்தில் கலவரம் இல்லை, ஆகையால் அங்கு வாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இந்நிலையில், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடக்கோரி சிதம்பரம் தொகுதி வாக்காளர் விஷ்ணுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் நாளன்று வன்முறை ஏற்பட்டதால், 275 பேர் வாக்களிக்கவில்லை என்றும், அங்கு மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவரது மனுவை பரிசீலித்த நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அமர்வு, மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட மறுத்துவிட்டனர். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எப்படி மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தேர்தல் வழக்காக தொடரும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: