ஆய்வுக்கு பின் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மலைகிராமத்திற்கு ரோடு போடுவது எப்போது?

* காந்திகிராம மக்கள் காத்திருப்பு

வருசநாடு :  வருசநாடு அருகே குண்டும் குழியுமான மலைச்சாலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சாலை அமைப்பதற்காக ஆய்வு நடத்திய அதிகாரிகள் அதன்பிறகு கண்டுகொள்ளவில்லை என மக்கள் புலம்புகின்றனர். வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் மலை கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர்.

 இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கொட்டை முந்திரி, இலவம்பஞ்சு, பீன்ஸ், அவரை, தக்காளி போன்ற பணப்பயிர்கள் இப்பகுதிகளில் விளைகிறது. இதனால் விவசாய விளைபொருட்களை ஆண்டிபட்டி, தேனி, கம்பம், மதுரை போன்ற பகுதிகளுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டு செல்லும் பொழுது தலைச்சுமையாக கொண்டு செல்வது இயல்பாக உள்ளது. கடந்த 80 ஆண்டு காலமாக மலைகிராம மக்கள் சாலை வசதி வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலகம் சென்று பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து இப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வுப் பணி நடைபெற்றது. அப்போது சாலை பணிகள் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்து சென்றனர். இதனைத் தொடர்ந்து பணி எப்போது நடைபெறும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

 இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னகாளை கூறுகையில், தார்ச்சாலை வசதி சம்பந்தமாக ஏற்கனவே கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாலை போடுவதாக அதிகாரிகள் தெரிவித்து சென்றார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.

இதனால் எங்கள் பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் சிரமத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். எனவே தேனி மாவட்ட கலெக்டர் மலை கிராம சாலை உடனே செய்து முடித்திட உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Related Stories: