ஆற்காடு அருகே தனது டிராக்டரில் எடுத்துச்சென்று பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கும் விவசாயி

ஆற்காடு :  ஆற்காடு அருகே குடிநீர் தேவைப்படும் பொதுமக்களுக்கு விவசாயி இலவசமாக தனது டிராக்டர் மூலம் குடிநீரை வழங்கி வருகிறார். வேலூர் மாவட்டம் ஆற்காடு  அடுத்த கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(எ) குட்டி(38) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள இவர் அதில்  விவசாயம் செய்து வருகிறார். மேலும், சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவதிப்படுவதை பார்த்த விவசாயி செல்வம்  அவர்களுக்கு இலவசமாக  குடிநீர் வழங்க முடிவு செய்தார். தொடர்ந்து, தனது விவசாய கிணற்றில் இருந்து பெரிய சின்டெக்ஸ் டேங்க்குகள்  மூலம் தண்ணீர் நிரப்பி அதனை தனது சொந்த டிராக்டரில் வைத்து மாம்பாக்கம், சொறையூர் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு தினமும் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்.  

அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தகவல் கொடுத்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு டிராக்டரில் தண்ணீரை கொண்டு சென்று வழங்குகிறார். பொதுமக்களும் தங்கள் தேவைக்கு ஏற்ப குடங்களிலும் கேன்களிலும் தண்ணீரை மகிழ்ச்சியோடு பிடித்து செல்கின்றனர்.

 இதுகுறித்து, விவசாயி செல்வம் கூறியதாவது:  கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களின்  தண்ணீர் தேவையை தன்னால் பூர்த்தி செய்ய இயலும்.  மேலும், பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு இதுபோன்ற இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என்று எண்ணம்  இருந்தாலும் நேரம் மற்றும் ஆட்கள் இல்லாத நிலையில் தான் ஒருவரே நேரில் கொண்டு சென்று வழங்குவதால் குறிப்பிட்ட சில கிராமங்களுக்கு மட்டுமே வழங்க முடிகிறது என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இதுபோன்று வசதி வாய்ப்பு உள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு இலவசமாகக் குடிநீர் வழங்கினால்  இந்த கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: