ரூ.1.80 கோடியில் அமைக்கப்பட்டசுத்திகரிப்பு நிலையம் தயார் : ஒரு லிட்டருக்கு 3 பைசா மட்டுமே செலவாகும்

ஈரோடு : ஈரோடு அருகே சூளை பகுதியில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் பணிக்கான முன்னோட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் சாய, தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறுகளில் கலப்பதில் நீர் மாசடைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நீரை சுத்தப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி, நீர்நிலைகளை மாசுப்படுத்தும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடுதல் செலவாகும் என்பதால் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொது சுத்திகரிப்பு நிலையம் மூலமாக கழிவுநீரை 100 சதவீதம் நல்ல நீராக சுத்திகரிப்பு செய்ய முடியுமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெங்களூரில் ஒரு தனியார் நிறுவன சுத்திகரிப்பு நிலையம் மூலமாக 100 சதவீதம் கழிவுநீரை குடிக்க உகந்த நல்ல நீராக மாற்றுவது தெரிய வந்தது. அந்த தொழில்நுட்பத்தை ஈரோட்டில் செயல்படுத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2017ம் ஆண்டு ஈரோடு அருகே சூளை பகுதியில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் முதல் கட்டமாக கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டனர்.

இதற்கான கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு முன்னோட்டம் நடந்து வருகிறது. பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் இருந்து வரும் கழிவுநீர், சாய ஆலைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சாயநீர் ஆகியவற்றை கொண்டு வந்து அந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, டிடிஎஸ் அளவு குறைவாக உள்ளதா என்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பெங்களூரில் இருந்து 2 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு முன்னோட்டம் நடத்தப்படுகிறது.

தற்போது கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையத்தில், கழிவுநீரை குறைந்த செலவில் சுத்திகரிப்பு செய்யும் பணிக்கான முன்னோட்டம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஒரு லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 3 பைசா மட்டுமே செலவாகும். இதுகுறித்து சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஈரோடு மாவட்டத்தில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக முதல்கட்டமாக சூளையில் உள்ள பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அங்கு கழிவுநீர் சுத்தம் செய்வது தொடர்பாக முன்னோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் கழிவுநீர் மற்றும் சாயநீரை சுத்தம் செய்யும்போதும் எதிர்பார்த்த அளவு நீரின் உப்புத்தன்மை (டிடிஎஸ்) குறையாமல் இருந்து வந்தது.

பின்னர் பெங்களூரில் இருந்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு முன்னோட்டம் நடத்தப்பட்டது. தற்போது எதிர்பார்த்த அளவிற்கு நீரின் உப்புத்தன்மை குறைந்துள்ளது.  தற்போது முன்னோட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையில் சுத்தம் செய்ய ஒரு லிட்டருக்கு 3 பைசா மட்டுமே செலவாகிறது.  ஒரு யூனிட்டில் தினசரி 1.20 லட்சம் லிட்டர் வீதம் 2 யூனிட்டுகளில் 2.40 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்தம் செய்யலாம். திடக்கழிவுகளும் குறைவாகவே கிடைக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: