பல்வேறு இடையூறுகளை தாண்டி கர்நாடக எல்லைக்குள் நுழைந்தது கோதண்டராமர் சிலை!

பெங்களூரு: பல்வேறு கட்ட தடைகளுக்கு பிறகு கர்நாடக எல்லைக்குள் கோதண்டராமர் சிலை சென்றது. திருவண்ணாமையில் இருந்து கர்நாடகத்திற்கு கொண்டு செல்லப்படும் 380 டன் எடை கொண்ட கோதண்டராமர் சிலையானது 6 மாத காலத்திற்கு பிறகு அந்த மாநில எல்லையை வந்தடைந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தெற்கு பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி தேவஸ்தான கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், ஆதிசேஷன் சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரே கல்லில் கோதண்டராமரின் முக உருவம் செதுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஈஜிபுரா என்ற இடத்திற்கு 246 டயர்கள் கொண்ட லாரி மூலம் இந்த சிலை புறப்பட்டது. 380 டன் எடை கொண்ட பிரமாண்ட சிலையானது பல்வேறு இடையூறுகளை கடந்து தற்போது அத்திப்பள்ளி என்ற இடத்தை நெருங்கியுள்ளது. முன்னதாக சூலகிரி பகுதியில் சாலை பிரச்சனை காரணமாக 3 மாத காலம் நிறுத்த வைக்கப்பட்டது. சாலை சீரமைக்கப்பட்டு புறப்பட்ட சிலை தென்பெண்ணை ஆறு அருகே 11 நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஆற்றின் குறுக்கே மண் சாலை அமைக்கப்பட்டு அதன்பின் புறப்பட்ட கோதண்டராமர் சிலை நேற்று இரவு ஓசூரை சென்றடைந்தது. இதையடுத்து இன்று காலை கர்நாடக மாநிலத்தின் அத்திப்பள்ளி பகுதியை அடைந்ந்தது. தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு ஈஜிபுரா பகுதிக்கு சென்று விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: