சுற்றுலா விளம்பர போர்டில் தெளிவில்லாத ஊர்களின் பெயர்கள்

* திணறும் சுற்றுலா பயணிகள்

ராமநாதபுரம் : திருப்புல்லாணியில் புகழ்பெற்ற ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களின் ஒன்றாக திகழும் இத்திருக்கோயிலில் நாள்தோறும் வெளிமாநிலங்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆதி ஜெகநாதப் பெருமாள், பத்மாசனி தாயார், பட்டாபிஷேக ராமர், தர்ப்பசயன ராமர், சந்தான கோபால கிருஷ்ணர் என மூலவர் சன்னதிகள் உள்ளன. ஆண்டுக்கு 6 மாதங்கள்  திருவிழாக்கள் நடக்கிறது.

சுற்றுலா தலமாக உள்ள திருப்புல்லாணியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில்  சுற்றுலா பயணிகளில் தகவலுக்காக வரவேற்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் பெயர்கள், ஊர்கள்,  திருப்புல்லாணியில் இருந்து செல்ல எவ்வளவு தூரம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு முன் வைக்கப்பட்ட போர்டில் சுற்றுலா தலங்களின் தூரங்கள் வழித்தடங்கள் தெளிவாக இல்லாததால் சுற்றுலா பயணிகள் குழப்பமடைகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட போர்டை புதுப்பிக்காததால் எழுத்துக்கள் தெளிவில்லாமலும். புரியாமலும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மாவட்ட வரைபடத்தில் சுற்றுலா தலங்களில் பெயர்களை குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. வரைபட கோடுகள் மறைந்து புள்ளிகள் மட்டும் தெரிகின்றன. பல மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலாத் துறையின் மூலமாக வைக்கப்படடுள்ள இந்த போர்டை பார்த்து ஏதும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. பல வண்ண கலர்களில் நவீன டிஜிட்டல் போர்டுகள் வந்த நிலையில் சுற்றுலாத்துறை இன்னும் பழைய காலத்தில் உள்ளது.

தகர போர்டுகளில் தகவல்கள் எழுதி வைத்தால் யாருக்கும் பயனில்லை. மாவட்டத்தில் ராமேஸ்வரம் தேவிபட்டிணம், திருப்புல்லாணி ஏர்வாடி, நயினார் கோயில் பழங்கால சிறப்பு மிக்க திருக்கோயில்கள் சுற்றுலா தலங்களாக உள்ள நிலையில், சுற்றுலாத்துறை சுறுசுறுப்பில்லாத துறையாக உள்ளது என சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையிலிருந்து சுற்றுலா வந்த பயணி கூறுகையில், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க வந்தோம். முதலாவதாக திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தோம். சுற்றுலா துறையினர் வைத்துள்ள போர்டில் ஊர்களின் பெயர்கள் வழி விபரங்கள் தெளிவாக இல்லை. சுற்றுலா பயணிகள் வருகையால் பல வகையில் பொருளாதாரம் ஏற்றம் காணப்படுகிறது.

வெளி மாநிலங்களில் சுற்றுலா தலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து சாலை வசதி, வண்ணமயமான அலங்காரங்கள், ஜொலிக்கும் மின்விளக்குகள் என பயணிகளை கவருகின்றன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தெளிவாகவும்,  அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என ஆர்வத்தை தூண்டும் வகையிலும் பல ஏற்பாடுகளை செய்துள்ளளர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றார்.

Related Stories: