'கமலின் நாக்கை அறுப்பேன்'எனக்கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ம.நீ.ம கட்சியினர் ஆளுநருக்கு கடிதம்

சென்னை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இந்து தீவிரவாதம் என்று பேசிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி பேசி இருந்தார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்து முடிந்தது. அதேபோல காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 19ம் தேதி நடந்து முடிந்த நிலையில் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. முன்னதாக, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடிகர் கமல் மே 13ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.

அவர் பெயர் நூதுராம் கோட்சே என்று தெரிவித்தார். அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு பாஜவினரும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு, கமல் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிறுபான்மையின வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக பெரும் சர்ச்சை கிளம்பியது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு ம.நீ.ம கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related Stories: