ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

குல்காம்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் தங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளதை அறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும், போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று ராணுவ உயரதிகாரிகள் கூறியுள்ளனர். அப்பகுதியில் இருந்த துப்பாக்கி வெடி மருந்து மற்றும் ஆயுதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கொல்ப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் குல்காமில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: