×

அங்கீகார கட்டணம் செலுத்தாத 121 பி.எட் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்குமா? அதிர்ச்சியில் பெற்றோர்

சென்னை: அங்கீகாரம் கட்டணம் செலுத்தாத 121 பிஎட் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் 736 தனியார் பிஎட் கல்லூரிகள் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பிஎட், எம்எட் பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேற்கண்ட கல்லூரிகளை தொடங்கும் போது 3 ஆண்டுக்கு செல்லத் தக்க அங்கீகாரத்தை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகம் வழங்கியது.

இதற்காக அந்த கல்லூரிகள் அங்கீகாரக் கட்டணம் செலுத்தின. 3ஆண்டுக்கு பிறகு மீண்டும் தங்கள் அங்கீகாரத்தை கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால், பல கல்லூரிகளின் அங்கீகாரம் முடிந்த நிலையில், தொடர்ந்து இயங்கி வருவதாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கல்வியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரக் கட்டணம் செலுத்த பல முறை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மே 5ம் தேதிக்கும் கட்டணத்தை செலுத்தி அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் இறுதிக் கெடு வைத்தது. ஆனால், இதுவரை 121 கல்லூரிகள் அங்கீகாரக் கட்டணம் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் இந்த கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த கல்வியியல் பல்கலைக் கழகம் அனுமதி வழங்காது என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ள நிலையில், மத்திய அரசு இளநிலை பட்டப்படிப்புடன் கூடிய பிஎட் பட்டத்தையும் சேர்த்து 4 ஆண்டு ஒருங்கிணைந்த பிஎட் படிப்பை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்நிலையில், 121 கல்லூரிகள் அங்கீகாரக் கட்டணம் செலுத்தாமல் இருப்பது மாணவர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், கட்டணம் செலுத்தாத கல்லூரிகளின் பட்டியலை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும் என்று கல்வியாளர்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர் சேர்க்கை நடத்த 121 கல்வியியல் பல்கலைக் கழகம் அனுமதி வழங்காது.

Tags : pd colleges ,Parents , Recognition fee, 121 pd, college, students admissions?
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்