மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு: போலீசார் நடவடிக்கை

சென்னை: முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழீழத்தில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் ஒரே இடத்தில் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து மே 17 இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 19ம் தேதி உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி நிகழ்ச்சி மற்றும்

பொதுக்கூட்டத்திற்கு மே 17 இயக்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி மே 17 இயக்கம் சார்பில் கடந்த 19ம் தேதி மாலை தி.நகர் முத்துரங்கன் சாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக சில கருத்துகள் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கூட்டத்தில் பேசிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 153 (ஏ), 505 (வி)(ii) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: