×

சேலம் 8 வழிசாலை திட்டத்தில் முதல்வர் திடீர் பல்டி? ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: சேலம் எட்டு வழிசாலை திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று முதல்வர் கூறிய கருத்துக்கு துணை முதல்வர் ஆதரவு தெரிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜ தலைவர் அமித்ஷா, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு, டெல்லியில் விருந்து அளிக்க உள்ளார். அதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் நேற்று காலை 10.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும், மீண்டும் மத்தியில் பாஜதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். அந்த அடிப்படையில்தான் தற்போதைய கருத்து கணிப்பு வெளிவந்துள்ளன. மத்தியில் அமைய இருக்கும் பாஜவின் புதிய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா என்பதுபற்றி 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்ததும், முடிவுகள் முழுமையாக வெளிவந்த பின்பு, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூடி, இதுபற்றி பரிசீலித்து நல்ல முடிவை எடுப்பார்கள்.

தமிழகத்தில் நடந்த 38 எம்பி தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். அதிமுகவில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் வெளியேறியது, பேசியது அனைத்தும் அவருடைய கருத்தாகத்தான் எடுத்து கொள்ளவேண்டும். ஆனாலும் அவரிடம் விளக்கம் கேட்கப்படும்.

மேலும் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில்,
தேர்தலுக்கு முன்பு, சேலம் 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்படும் என்று கூறினீர்கள். தேர்தல் முடிந்த பின்பு, 8 வழிச்சாலை திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று நேற்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன. ‘‘முதல்வர் உறுதியான, தெளிவான விளக்கம் அளித்து விட்டார்’’ என்றார். மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு, கருத்து திணிப்பு என்று எதிர்க்கட்சிகள் மற்றும் முதல்வர் எடப்பாடி கூறியது பற்றிய கேள்விக்கு, இது அவரவர் மனநிலையை பொறுத்துதான் இருக்கும் என்றார்.

Tags : Chief Minister ,resignation ,Salem 8 ,Interview ,A. Panneerselvam , Salem, 8th floor, Chief Minister, Sudden Veerthi, O. Panneerselvam, Interview
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...