அரசால் தொழில் பாதிப்பு என கூறி ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை: பேஸ்புக் வீடியோ வைரலால் பரபரப்பு, ஆளுங்கட்சிக்கு பொதுமக்கள் கேள்வி

சென்னை: தன் சாவுக்கு அரசே காரணம் என்று குறிப்பிட்டு மதுரவாயில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை மதுரவாயல் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சின்னராஜா (48). இவரது மனைவி ரீட்டா (42). சின்னராஜா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்துள்ளார். இதனால் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்கு சென்ற அவர் அறையிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வராததால் நேற்று அதிகாலை அவரது மனைவி சென்று பார்த்துள்ளார். அப்போது அறையில் அவர் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்து அலறிய  அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் சின்னராஜாவை கீழே இறக்கி பார்த்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சின்னராஜா தற்கொலை செய்வதற்கு முன்பு பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருப்பது  தெரியவந்தது.

இதுகுறித்து சின்னராஜா பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

பஞ்சாயத்து  அப்ரூவல் எப்போது நிறுத்தப்பட்டதோ அப்போதே ரியல் எஸ்டேட் தொழில்  செய்பவர்களின் வாழ்க்கை வீணாகிவிட்டது. அதை தொடர்ந்து முட்டி மோதி ஏதாவது  பண்ணுவோம்னு, வட்டிக்கு மேல வட்டி வாங்கி இடத்துக்கு போய் பணம் கட்டுனா,  லேட்டாயிடுச்சுன்னு சொல்லி இடத்த கொடுக்க மாட்டேன்னு பிரச்னை.

அப்ரூவ்டு  வாங்க போனா, ஓபிஎஸ்சுக்கு 3 ரூவா கொடு, அவனுக்கு 2 ரூவா கொடு, இவனுக்கு 5 ரூவா கொடுன்னு எங்களை உயிரோட கொல்றானுங்க. ஒவ்வொரு நாளும் போராட்டமா இருக்கு. இந்தப்பக்கம் கஸ்டமருக்கு பதில் சொல்ல முடியல. அந்தப்பக்கம் இடம்  கொடுத்தவங்களுக்கு பதில் சொல்ல முடியல.

இந்தப்பக்கம் கடன் கொடுத்த  கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியல. இந்த ரியல் எஸ்டேட் தொழிலை கடந்த 5 ஆண்டுகளில் ஒழித்துக் கட்டிவிட்டார்கள் இந்த ஆட்சியில். நான் ஓடி, ஓடி என்னடா இந்த வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, இனிமேல் வாழ்வதே ஒரு பெரிய கேள்விக்குறியா இருக்கிறதே, எவனுக்குதான் பதில் சொல்வது. படுத்தா தூக்கம் வரல.

நிம்மதி இல்லையே என்ற ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டு மன உளைச்சலோட நானாவது போய் தீரலாம்னு முடிவுக்கு வந்திருக்கிறேன். இனிமே இருக்கிற ரியல் எஸ்டேட் பண்றவங்களுக்காவது இந்த அரசாங்கம் வாழ்வாதாரத்தை செய்து கொடுத்து அவங்களை சப்போர்ட் பண்ண வேண்டும்  என்பதுதான் என்னோட ஆசை. எனக்கென்னமோ இந்த ஆட்சியில நடக்கும்னு தெரியல. தளபதி ஸ்டாலின் அவர்களும், திருமா அவர்களும் இதை எடுத்து செய்தால் நிச்சயமாக ரியல் எஸ்டேட் தொழில் நல்லா வரும்.

கண்டிப்பா அவர்கள்தான் வருவார்கள் என்ற நம்பிக்கையோடுதான் நான் இந்த மண்ணைவிட்டு மறைகிறேன். இருந்தாலும் என் குடும்பத்தை விட்டு போறேன்னு ஒரு கஷ்டம் இருக்கிறது. (கண்  கலங்குகிறார்). அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் என்னால் இதற்கு மேல் உயிர் வாழ்ந்தால் ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருப்பேன். இதனால் நான் மறைகிறேன். நன்றி. ஜெய்ஹிந்த்.

Related Stories: