விரைவில் தமிழகத்தில் 13 குவாரிகள் திறப்பு ஒரு யூனிட் மணல் ரூ550ல் இருந்து ரூ1,300 ஆக திடீர் விலை உயர்வு

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறை தளர்த்திய பிறகு தமிழகத்தில் 13 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 13 மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் குறைவான அளவே மணல் கிடைப்பதால் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கி போய் உள்ளது. எனவே, புதிதாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்று கட்டுமான சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதன்பேரில், 22 குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்தது. தற்போது, 13 குவாரிகளை திறக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, தேர்தல் நடத்தை விதிமுறை தளர்ந்த பிறகு புதிதாக 13 குவாரிகள் திறக்கப்பட்டு, அதன் மூலம் மணல் விற்பனை செய்யப்படும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க 60 குவாரிகள் வரை திறக்கப்படுகிறது. தற்போது சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ள 13 குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.  மணல் விலை ஒரு யூனிட் ரூ.550 என விற்பனை செய்யப்பட்டது, தற்போது ரூ.1300க்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார்.

செயற்கை தட்டுப்பாட்டு: மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், ‘தமிழகத்தில் 7 குவாரிகள் இயங்கி வருவதாக பேப்பரில்தான் உள்ளது. ஆனால், முட்டம், அங்குசெட்டி பாளையம் 2 இடங்களில்தான் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில் 7 குவாரிகளில் 40 ஆயிரம் லோடு மணல் புக்கிங் செய்து காத்து கிடக்கிறோம். ஆனால், எங்களுக்கு மணல் வழங்கப்படவில்லை. இது குறித்து கேட்டவுடன், எல்லா குவாரிகளையும் வெயிட்டிங்கை எடுத்து விட்டனர். தமிழக அரசே செயற்கையாக மணல் விலையை உயர்த்தி விட்டது. இப்போது மணல் தட்டுப்பாட்டால் ஒரு லோடு (3 யூனிட்) மணல் விலை ரூ.1 லட்சம் என்று விற்பனையாகி வருகிறது. மலேசியாவில் இருந்து மணல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணல் 3 யூனிட் ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே சென்னையில் திருட்டு மணல் 3 யூனிட் ரூ.26 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. இங்கிருந்து மணல் கோவைக்கோ, மதுரைக்கோ எடுத்து செல்ல முடியாது. அதனால், அங்கு மணல் தட்டுப்பாட்டால் விலை எகிறி விட்டது என்றார்.    மணல் விலை உயர்வால் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: