ஆண்டிற்கு 10 ஆயிரம் ஆவணங்களுக்கு குறைவாக பதிவாகும் சார்பதிவாளர் அலுவலக எல்லை மறுவரையறை செய்யும் பணி தீவிரம்: அதிகாரி தகவல்

சென்னை: ஆண்டிற்கு 10 ஆயிரம் ஆவணங்களுக்கு குறைவாக பதிவாகும் சார்பதிவாளர் அலுவலக எல்லை மறுவரையறை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அதில், குறிப்பிட்ட 100க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமே அதிகளவில் பத்திரம் பதிவு செய்யப்படுகிறது.

இந்த அலுவலகங்களில் இரண்டு சார்பதிவாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டதால் பத்திரங்களை திருப்பி கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் ஒரு சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 10 பத்திரங்கள் கூட பதிவாவதில்லை. அந்த அலுவலகங்களில் ஆண்டிற்கு 5 ஆயிரம் பத்திரங்கள் பதிவாவதே பெரும் சவாலாக உள்ளது.

இந்த அலுவலகங்களில் எந்த வேலையும் இல்லாததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த 40 சார்பதிவாளர் அலுவலகங்களை மூட பதிவுத்துறை முடிவு செய்தது. ஆனால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த அலுவலகங்களை மூடும் திட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து அந்த அலுவலகங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிக பத்திரம் பதிவாகும் சார்பதிவாளர் அலுவலக எல்லையை மறு வரையறை செய்ய பதிவுத்துறை முடிவு செயதுள்ளது. அதன்படி, அதிக பத்திரம் பதிவு செய்யப்படும் சார்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள எல்லையை குறைவாக பத்திரம் பதிவாகும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு மாற்றி அமைக்கப்படுகிறது.

தற்போது, இந்த சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லையை மறுவரையறை செய்யும் பணியில் மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை முடித்து விட்டு பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு அறிக்கையாக மண்டல டிஐஜிக்கள் அனுப்பி வைக்கின்றனர்.

அதன்பிறகு தமிழக அரசின் ஒப்புதல் பெற்று சார்பதிவாளர் அலுவலக எல்லை மறுவரையறை செய்தது நடைமுறைக்கு வரும் என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: