×

குடிநீரை சிக்கனமாக விநியோகிப்பது எப்படி? குடிக்க மட்டுமே ஒரு குடும்பத்துக்கு 2 குடம் தண்ணீர் தரவேண்டும்: குளிக்க, துவைக்க கொடுக்க கூடாது, பொறியாளர்களுக்கு நீரியல் வல்லுனர் அறிவுரை

சென்னை: குடிநீர் பஞ்சத்தை போக்க நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு குடிக்க 2 குடம் தண்ணீர் அளிக்கலாம். ஆடம்பரத்துக்கு தண்ணீர் அளிக்க கூடாது என்று தண்ணீரை சிக்கனமாக விநியோகிப்பது எப்படி என்பது குறித்து பொதுப்பணித்துறை, குடிநீர் வாரிய பொறியாளர்களுக்கு நீரியல் வல்லுனர் பயிற்சி வகுப்பில் அறிவுரை அளித்தனர்.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அணைகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர் தேக்கும் இடங்கள் வற்றி பாளம்பாளமாக வெடித்து காணப்படுகிறது. இதனால் கடந்த மாதம் முதல் குடிநீர் பஞ்சம் மட்டும் ஏற்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே அன்றாட தேவைக்கு கூட குளிக்க, பாத்திரம் கழுவ, துணி துவைக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே யுள்ள பூண்டி, புழல் உள்ளிட்ட 4 ஏரிகளில் 127 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த நீரை கொண்டுதான் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க வேண்டும். இந்நிலையில் தற்போதைய நீர் இருப்பை கொண்டு நீர் மேலாண்மை செய்வது தொடர்பாக நீரியல் வல்லுனரும், பேராசிரியருமான நடராஜன் என்பவர் நேற்று தலைமை செயலகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தினார்.

இதில், பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர், குடிநீர்வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் மற்றும் குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அணைகள், ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக உள்ள நிலையில், அந்த தண்ணீரை கொண்டு சமாளிப்பது எப்படி என்பது குறித்து பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள நேரங்களில் சிக்கனமாக விநியோகிப்பது எப்படி என்பது குறித்தும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தற்போதைய சூழ்நிலையில் குடிநீருக்கு தண்ணீரை பெறுவதற்கான மாற்று வழிகள் என்ன என்பது குறித்து அப்போது அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.இது குறித்து குடிநீர்வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘அணைகள், ஏரிகள் அருகே ஆழ்குழாய் அமைத்து குடிநீர் பெறுவது, குடிநீருக்கு பயன்படுத்தாமல் உள்ள ஏரிகளில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரித்து வழங்குவது, கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து தருவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நீரியல் வல்லுனர் வழங்கினார்.

மேலும், அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் சேர்த்து இதுவரை திறக்கப்பட்டு வந்த நிலையில், குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் திறக்க வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார். குறிப்பாக, ஒரு நாளைக்கு நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 2 குடம் தண்ணீர் விநியோகித்தால் போதுமானது. அது போன்று தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திட்டங்களை செயல்படுத்துவதால் ஆடம்பரமாக தண்ணீர் தரக்கூடாது’ என்றனர்.

தண்ணீர் ஆடம்பரமா?
நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு 2 குடம் மட்டுமே குடிநீர் தர வேண்டும். மாற்று திட்டங்கள் செயல்படுத்துவதால் குளிக்க, துணி துவைக்க மற்ற தேவைகளுக்காக தண்ணீர் தரக்கூடாது. மக்கள் ஆடம்பரமாக பயன்படுத்தும் வகையில் (குளிக்க, பாத்திரம் கழுவ, கை கழுவ) தண்ணீர் சப்ளை செய்யக் கூடாது என்று தமிழக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நீர் மேலாண்மை திட்டத்தை கோட்டைவிட்ட அரசு, இப்போது தண்ணீரையும் ஆடம்பர பட்டியலில் சேர்த்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : engineers , How to drink, drink, and deliver Hydraulic expert, advice
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி