×

வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்

சென்னை: தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, அதிமுக முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவுரை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த பணிக்கு முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அதிமுகவினர் மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். வெற்றிக்கனியை அதிமுகவிற்கு அர்ப்பணிக்கும் வகையில் பின்வரும் அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள்.

* வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23ம் தேதி, அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்றுவிட வேண்டும்.

* வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டு பாருங்கள்.

* ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதிவைத்துக்கொண்டு, அதை தேர்தல் அதிகாரியிடம் சரிபார்க்க வேண்டும்.

* அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் உங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும்.

அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இவ்வாறு கூறி உள்ளனர்.


Tags : agents ,AIADMK ,vote count , Vote count, AIADMK agents,
× RELATED ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: 400 ஏஜெண்டுகளின் சொத்துக்கள் முடக்கம்!