×

விவிபேட் ஓட்டுக்களை எண்ண கூடுதல் ஏஜென்ட்டுகள்

சென்னை: விவிபேட் ஓட்டுகளை எண்ணும் மையங்களில் கூடுதல் எண்ணிக்கையில் ஏஜென்ட்டுகளை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு ஒன்றை அளித்தனர். அப்போது, ஒவ்வொரு தொகுதியிலும் சமவாய்ப்பு அடிப்படையில் 5 வாக்குச்சாவடிகளில் விவிபேட்டில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. விவிபேட் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் மையங்களில், வேட்பாளர் சார்பில் பணியாற்றும் ஏஜென்ட்டுடன் பூத்வாரியாக விவிபேட் ஓட்டுகளை எண்ண, கூடுதலாக ஏஜென்ட்டை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூவை சந்தித்தனர்.

பின்னர் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கும் சிரமங்களை எடுத்து சொன்னோம். எவ்வளவு வாக்கு பதிவாகி உள்ளது என்பதற்கான 17 சி படிவத்தை ஏஜென்ட் எடுத்துவரக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். அது சரியாக இருக்காது என்று தெரிவித்தோம். ஏஜென்ட்டே 17 சி படிவத்துடன், பென்சில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதற்கு தற்போது அனுமதி வழங்கியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான 17 பி படிவத்தின் கார்பன் காப்பி அல்லது ஜெராக்ஸ் காப்பி கொடுக்க வேண்டும். விவிபேட் வாக்கு எண்ணிக்கைக்கு தனி ஏஜென்ட்டை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டோம், அனுமதிப்பதாக உறுதியளித்துள்ளனர். அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 40 மாணவர்கள் உட்காரும் சிறிய வகுப்பறையில் 800 ஏஜென்ட்டுகள் உட்கார அனுமதி வழங்கியுள்ளனர். இது வாக்கு எண்ணிக்கையின்போது தேவையற்ற பதற்றம், சச்சரவுகளை ஏற்படுத்தும். அதனால் வேறு அறை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அதிகாரியை தொடர்புகொண்ட தலைமை தேர்தல் அதிகாரி வாக்கு எண்ணிக்கைக்கு பெரிய அளவிலான அறையை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார் என்றனர்.


Tags : Vivipate Drive, Extra, Agents
× RELATED ஆந்திராவில் பரபரப்பாக மாறும் அரசியல்...