×

மெரினாவில் பரபரப்பு சம்பவம் ராட்டினத்தில் சிக்கி 8 வயது சிறுவன் பலி: உரிமையாளர் மகன் கைது

சென்னை: மெரினா கடற்கரையில் குழந்தைகள் விளையாடுவதற்கான ராட்டினத்தில் சிக்கி 8 வயது சிறுவன் துடிதுடித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக ராட்டினத்தின் உரிமையாளர் மகனை போலீசார் கைது செய்தனர். மெரினா கடற்கரையில் தினமும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு உள்ள கடற்கரை மணற்பரப்பில் அம்பத்தூர் அயப்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ராட்டினம் அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி மகன் பிரகாஷ் (33) ராட்டினத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.அப்போது, அருகில் பாணிப்பூரி கடை வைத்துள்ள நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவரின் மகன் பிரணவ் (8) தினமும் ராட்டினம் அருகில் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம்.

அதேபோன்று நேற்று இரவும் ராட்டினத்திற்குள் விளையாடிக் கொண்டிருந்தான். ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த பிரணவின் தாய் ‘அடிபடப் போகிறது’ என்று சத்தம் போட்டுள்ளார். இதைக் கவனித்த பிரணவ் தன்னுடைய தாய், தன்னை அழைப்பதாக நினைத்து ராட்டினத்திற்குள்ளே இருந்து வெளியில் வர முயற்சி செய்துள்ளார். அப்போது சுற்றிக் கொண்டிருந்த ராட்டினத்தின் கம்பி பிரணவின் தலையில் பலமாக தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பிரணவ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான். இதை பார்த்த பிரணவ்வின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து மகனை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து அவனது பெற்றோர் அலறி துடித்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராட்டினத்தை இயக்கிய பிரகாஷை கைது செய்தனர். இச்சம்பவம் மெரினா கடற்கரையில் பரபரப்பையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Tags : Marina , Marina, thriller, stuck , wheelchair, boy kills, owner, son, arrested
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...