பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நக்கீரன் கோபாலிடம் சிபிஐ விசாரணை

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை வெளியே கொண்டு வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம் சிபிஐ அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது தன்னிடம் உள்ள வீடியோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் அவர் அதிகாரிகளிடம் அளித்தார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களிடம் பேஸ்புக் மூலம் பழகி காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்களை மிரட்டி பல லட்சம் பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். அதன்படி போலீசார் இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த திருநாவுக்கரசு உட்பட 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்களை போலீசார் பறிமுதல் ெசய்து பார்த்த போது, பாதிக்கப்பட்ட இளம்பெண்களுடன் ஒன்றாக இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நக்கீரன் வார இதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. இதனால், நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால் மீது பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெளியானதை தொடர்ந்து பொள்ளாச்சி காவல்நிலையத்தில் இருந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மகன்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.


இதற்கிடையே கடந்த ஏப்ரல் 1ம் தேதி நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் முன்பு ஆஜராகி 4 மணி நேரம் விளக்கம் அளித்திருந்தார். அதைதொடர்ந்து சிபிசிஐடி பொள்ளாச்சி வழக்கின் விசாரணை அறிக்கையை கடந்த மாதம் இறுதியில் விசாரணை அதிகாரியான நிஷா பார்த்திபன் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி அவர்கள் அளித்த தகவலின்படி பொள்ளாச்சியில் சம்பவ இடத்திற்கு நேரில் ெசன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பொள்ளாச்சி விவகாரம் குறித்து தொடர்ந்து எழுதி வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலை நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ இரண்டு நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் நேரில் ஆஜராகும் போது வழக்கு தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் கொண்டு வருமாறு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் இயங்கி வரும் சிபிஐ அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நக்கீரன் ஆசிரியர் கோபால் நேரில் ஆஜரானார். அப்போது, அவர் தன்னிடம் உள்ள வழக்கிற்கான வீடியோ உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் அதிகாரிகளிடம் அளித்தார். அதைதொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம் ‘உங்களுக்கு ஆதாரங்கள் கொடுத்து யார், அதன் உண்மை தன்மையை ஆய்வு செய்தீர்களா’ உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை  கேட்டதாக கூறப்படுகிறது. ஒன்றரை மணி நேரம் நடந்த  விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும்  நக்கீரன் கோபால் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்து நக்கீரன் கோபால் மதியம் 12.30 மணிக்கு வெளியே வந்தார்.

பின்னர் நக்கீரன் கோபால் நிருபர்களிடம் கூறியதாவது:

‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிபிஐ விசாரணை  சரியான பாதையில் செல்கிறது. சிபிசிஐடி விசாரணையின் போது, என்னை விசாரணை கைதி போல் நடத்தினார்கள். ஆனால் சிபிஐ என்னை சாட்சியாகவே விசாரணை நடத்தினார்கள். மீண்டும் என்னை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்க வில்லை. எங்களிடம் இருந்த ஆவணங்களின் பிரதியை சிபிஐயிடம் வழங்கியிருக்கிறோம். சிபிஐ விசாரணையில் நிச்சயமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சிபிசிஐடி விசாரணை செய்த போது அரசின் குறுக்கீடு இருந்ததாக தெரிகிறது’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Pollachi ,CBI , Pollachi sex, affair, nakheeran, CBI investigation
× RELATED பொள்ளாச்சியில் இருந்து வரத்து...