தூத்துக்குடி மக்களை ஏமாற்றி வரும் அரசின் நடவடிக்கையை முறியடிக்க உறுதி ஏற்போம்

சென்னை: தூத்துக்குடி மக்களை ஏமாற்றி வரும் அரசின் நடவடிக்கையை முறியடிக்க மே 22 தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளில் உறுதி ஏற்போம் என்று வைகோ சூளுரைத்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் அமைதி வழியில் நடந்த பேரணியின் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி மக்களின் உயிரை பறித்தது எடப்பாடி பழனிசாமி அரசு. இந்த நிகழ்வுகள் அனைத்தும் காவல்துறையால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, பயிற்சி பெற்ற, குறிபார்த்து சுடுகின்ற காவலர்களை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல். துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, துப்பாக்கிச் சூட்டில் உயிர் பலியானவர்களின் குடும்பங்களைக் காவல்துறை  தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வருகின்றது.

கடந்த ஓராண்டாக தூத்துக்குடியில், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற அடக்குமுறையை தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றது. கடந்த ஆண்டு மே 22ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கு கூட காவல்துறை அனுமதி மறுக்கின்றது. நீதிமன்றத்திற்குச் சென்றால், ‘அரங்குக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்துங்கள்’ என அறிவுறுத்தப்படுகின்றது. தூத்துக்குடி மக்களை ஏமாற்றி வரும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் முறியடிக்க தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளில் உறுதி ஏற்போம். ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்பதை, மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்து கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: