×

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷினை கொண்டு சென்றதால் பரபரப்பு: தில்லுமுல்லு நடப்பதாக திமுக வேட்பாளர் புகார்

மதுரை: மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி எலட்ரானிக் பொருட்களை கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குப்பெட்டிகள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை (மே 23) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

நேற்று மதியம் 3 மணி அளவில், இத்தொகுதிக்கான தேர்தல் ஊழியர்கள் உரிய அனுமதியின்றி, ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வேனில் ஏற்றிக்கொண்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர். அங்கு மெயின் கேட்டில் பாதுகாப்பில் இருந்த போலீசார் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

வாகனம் நேராக திருப்பரங்குன்றம் வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு சென்றது. இதுகுறித்து திமுக, அமமுக வேட்பாளர்களின் முகவர்கள் விசாரித்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷினை கொண்டு வந்திருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். உரிய அனுமதியின்றி இதனை எதற்காக கொண்டு வந்தீர்கள் எனக்கூறி பொருட்களை வேனில் இருந்து கீழே இறக்க அனுமதி மறுத்தனர்.

இதுகுறித்து வேட்பாளர்களுக்கும் தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் மற்றும் சில சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர். இதுகுறித்து டாக்டர் சரவணன், திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செல்போனில் விசாரித்தார். அவர் மீட்டிங்கில் இருப்பதாக கூறியதால், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான நாகராஜனிடம் புகார் மனு கொடுத்தார்.

மனுவில், ‘‘உரிய அனுமதியின்றி வந்த கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷினை கொண்டு செல்ல எப்படி அனுமதித்தனர்? போலீசார் அனுமதி கொடுத்தது தவறு. விசாரணை நடத்தி வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு இல்லாமல் முறையாக நடக்க ஆவன செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார்.  அப்போது கலெக்டர் நாகராஜன், ‘‘இதுபோன்ற மிஷின்கள் கொண்டு செல்ல அனுமதி உண்டு. முறையாகத்தான் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

இதுதொடர்பாக திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் கூறும்போது, ‘‘வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறையில் இருந்து 100 மீட்டருக்குள் எலக்ட்ரானிக் பொருட்களை, உரிய அனுமதி இல்லாமல் கொண்டு செல்லக்கூடாது என்பது விதிமுறை. கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதில் இதுபோன்ற மிஷின்கள் இல்லை.

ஆனால் அவர்கள் கொண்டு சென்ற எலக்ட்ரானிக் பொருட்கள் எந்த மாதிரியானவை என்பது வெளிப்படையாக தெரியாது. ரிமோட் மூலம் பதிவான வாக்குகளை மாற்றம் செய்யவும் வாய்ப்பு உண்டு. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. உரிய அனுமதியில்லாமல், பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உள்ளே இப்பொருட்களை அனுமதித்ததும் சந்தேகத்தை எழுப்புகிறது’’ என்றார்.

தேர்தல் அதிகாரி கூறும்போது, ‘‘தொகுதியில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும், வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அதை ‘ஏ3’ பேப்பரில் பிரிண்ட் எடுக்க வேண்டும். பிரிண்ட் எடுப்பதற்காகவே ஜெராக்ஸ் மிஷின் கொண்டு சென்றோம். தேர்தல் ஆணைய அனுமதியோடுதான், வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Candidate ,DMK ,voting ,center ,Madurai , Madurai, Vote Center, without permission, Computer, Xerox Mission, Dillu Mullu, DMK Candidate Complaint
× RELATED வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த...