பிரமாண்ட பெருமாள் சிலைக்காக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 34 அடி அகல தற்காலிக மண்பாலம்

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள பேரண்டபள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பெருமாள் சிலையை கொண்டு செல்ல தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 34 அடி அகலத்தில் மண் பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாலம் அமைத்ததும் பெருமாள் சிலை ஓரிரு நாட்களில் பெங்களூரு புறப்படும். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கொரக்கோட்டையில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை, ஓசூர் வழியாக கர்நாடகா மாநிலம் ஈஜிபுராவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பேரண்டப்பள்ளி பகுதியில், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடும் தென்பெண்ணையாற்றை சிலை கடந்து செல்ல வசதியாக தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்தது.  கடந்த வாரம் கர்நாடக மாநில பகுதிகளில் பெய்த மழை காரணமாக, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், மண்பாலம் அமைக்கும் பணி தாமதமானது. தற்போது, கெலவரப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 160 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் நீர் குறைந்துள்ளது. இதையடுத்து, மண்பாலம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. தண்ணீர் செல்வதற்கு வசதியாக 4 ராட்சத குழாய்கள் வைக்கப்பட்டு, பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலத்தை ஆய்வு செய்த பொறியாளர்கள், பாலம் மிகவும் குறுகலாக உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, 34 அடி அகலத்தில் மண்பாலத்தை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்தவுடன் ஓரிரு நாளில் சிலை பெங்களூரு புறப்படும் என தெரிகிறது. மண்பாலம் அமைக்கும் பணியால், கடந்த 13 நாட்களாக சிலை பேரண்டபள்ளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: