×

அருணாச்சலில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ திரங் அபோவ் மற்றும் அவரது மகன் உள்பட 11 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். அருணாச்சலப் பிரதேசத்தில் பீமா கண்ட் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கோனார்ட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏவாக இருந்தவர் திரங் அபோ (41). சமீபத்தில் மக்களவை தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு கோன்சா தொகுதியில் இவர் மீண்டும் வேட்பாளராக போட்டியிட்டார். இந்த நிலையில் அசாமில் இருந்து நேற்று தனது தொகுதிக்கு குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்டோருடன் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் திரப் மாவட்ட பகுதியில் வந்துக் ெகாண்டிருந்தபோது நாகா தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்ற தீவிரவாத அமைப்பினர் சரமாரியாக அவர் சென்ற வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் எம்எல்ஏ திரங் அபோ, அவரது மகன், பாதுகாப்பு அதிகாரி உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைய ஒரு பாதுகாப்பு அதிகாரியை போலீசார் மீட்டு அசாமின் திப்ருகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 
எம்எல்ஏ கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் பீமா கண்ட் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தேசிய மக்கள் கட்சி தலைவரும் மேகாலாய முதல்வருமான கோனார்ட் சங்மாவும்,  எம்எல்ஏ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமரும், உள்துறை அமைச்சரும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மாநில காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜவை குற்றம்சாட்டியுள்ளது. ராஜ்நாத் சிங் இரங்கல்: எம்எல்ஏ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `‘திரங் அபோ மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சி, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Arunachal ,MLA , Arunachal, MLA, shot dead
× RELATED அருணாச்சல் முதல்வர் உட்பட 5 பாஜக...