தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக தகவல் பெங்களூரு ஏர்போர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெங்களூரு: தென்மாநிலங்களில் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக கிடைத்துள்ள தகவலை  தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில், பஸ், விமான நிலையங்களில் பலத்த  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த  ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம், ஓட்டல் உள்பட 8 இடங்களில் அடுத்தடுத்து  தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ் தீவிரவாத  அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் குண்டு வெடிப்பிற்கான காரணங்களை அவர்கள்  கூறவில்லை. இந்நிலையில் தீவிரவாதிகள் மூன்று குழுக்களாக பிரிந்து  தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் நுழைந்துள்ளதாக சமூக  வலைத்தளங்கள் மூலம் தகவல் பரவியதால் தமிழத்தில் தீவிர முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கர்நாடகாவிலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு முழுவதும் போலீசார் பலத்த  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். குறிப்பாக விமான நிலையம், பஸ்,  ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், தேவாலயங்கள் போன்ற புனித ஸ்தலங்களில்  வரலாறு காணாத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு செல்பவர்கள் மற்றும் பெங்களூருவிற்கு வரும் பயணிகளிடம் தீவிர சோதனை  நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையம் மற்றும்  அதன் சுற்று வட்டார பகுதிகளில் 24 மணி நேரமும் மத்திய தொழிற் பாதுகாப்பு  படையினர், போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: