8வது நாளாக ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகை: உயிரை கொடுத்தாவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று நாகை அருகே குளத்தில் இறங்கி  விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வேளாங்கண்ணி அருகே மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். காவிரி டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் வகையில் கடற்கரையோர கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை சேர்ந்த வேதாந்தா குழுமத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள இந்த அனுமதியை எதிர்த்து கடலோர கிராம மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ மக்கள், வெள்ளையாற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது மீனவ கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம். மீனவர்களையும், மீன் இனபெருக்கத்தையும் அழிக்கும் வேதாந்தா குழுமத்தின் திட்டத்தை முறியடிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் அந்த பகுதி மக்கள் கூறியதாவது:

ஹைட்ரோகார்பன் திட்ட ஆய்வு மற்றும் செயல்படுத்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் அமையவுள்ளது. இந்த திட்டத்தால் லட்சக்கணக்கில் விவசாய மற்றும் மீனவ குடும்பங்கள் அழியும் அபாயம் உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கிணறுகள் தோண்டினால் கடல் நீர் மாசுஅடையும். எனவே கடல் வளத்தை அழிக்க முயற்சி செய்யும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாங்கள் அதில் இருந்து மீளுவதற்குள் காஜா புயலால் பாதிக்கப்பட்டோம். இப்படி இயற்கை சீற்றத்தில் இருந்து நாங்கள் மீண்டு எழுவதற்குள் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தினால் மீனவ கிராமங்களும், அங்கு வசிக்கும் மீனவ குடும்பங்களும் இல்லாமல் போய்விடும். எனவே இந்த திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த விடமாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். குளத்தில் இறங்கி போராட்டம்: நாகை அருகே பாலையூர் குளத்தில் விவசாயிகள் இறங்கி போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி தெற்கு கரைமேடு பகுதியில்,  மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத்தலைவர் தங்கசண்முகசுந்தரம்  தலைமையில் விவசாயிகள் உளுந்து வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags : pool , Protective, resistant, farmers, to Hyhthro carbon
× RELATED விவசாயிகள் கவலை வெலிங்டன் நீர்த்தேக்க கரைப்பகுதியில் கசிவு