×

தோப்பு வெங்கடாச்சலத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

ஈரோடு: அதிமுக பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் 2 நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்புவெங்கடாச்சலம். இவர் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்ததோடு ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த 2016ல் மீண்டும் எம்எல்ஏவானபிறகு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும் மாற்றப்பட்டு, தற்போதைய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணனுக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவி ஆகிய இரண்டும் தனக்கு கிடைத்த பிறகு தோப்புவெங்கடாச்சலத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையில் அமைச்சர் கருப்பணன் தீவிரம் காட்டினார். கருப்பணனுக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவும் இருந்ததால், தோப்புவெங்கடாச்சலத்திற்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் சில மாதங்களுக்கு முன்பு, தோப்புவெங்கடாச்சலம் புகார் தெரிவித்தார். இதையடுத்து கருப்பணன் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கடும் ஏமாற்றத்தில் இருந்து வந்த வெங்கடாச்சலம்,  அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக மக்களவை தேர்தலில் செயல்பட்டதாக அமைச்சர் கருப்பணன் மீது கடந்த வாரம் பத்திரிகையாளர்களிடம் புகார் கூறியதோடு இதற்கான ஆதாரங்களை கட்சி தலைமைக்கும் அனுப்பி வைத்தார். ஆனாலும் கருப்பணன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், நேற்று முன்தினம் தான் வகித்து வந்த ஜெ. பேரவை மாநில இணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததோடு சேலம் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதத்தை வழங்கினார். இதையடுத்து அதிமுக தலைமையில் இருந்து அவரை தொடர்பு கொண்டு சமாதானம் செய்து வருகின்றனர். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தோப்புவெங்கடாச்சலத்தை, சமாதானப்படுத்த அமைச்சர் பதவி அல்லது புறநகர் மாவட்ட செயலாளர் பதவி இரண்டில் ஏதாவது ஒன்றை வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு ஏற்ப அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனித்து வரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை தோப்பு வெங்கடாச்சலத்திடம் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதே பாணியில் மற்ற எம்எல்ஏக்களும் போர்க்கொடி தூக்கினால் என்ன செய்வது என தெரியாமல் அதிமுக தலைமை முடிவு எடுக்காமல் குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில் 2 நாட்களில் கட்சி தலைமை உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை எடுப்பது குறித்து தோப்புவெங்கடாச்சலம் முடிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Tags : gardens , Venkatachalam, action
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்