12 ஆண்டுக்குப் பிறகு தூசு தட்டுகிறது பிரக்யா மீதான கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கிறது மபி அரசு

போபால்: போபால் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் பிரக்யா சிங் தாகூருக்கு எதிராக 12 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மபி மாநில அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முடிந்த மக்களவை தேர்தலில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், போபால் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜ சார்பில் மாலேகான் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தாகூர் போட்டியிட்டார். மத்திய பிரதேசத்தில் கடந்த 2007ம் ஆண்டு திவாஸ் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் முன்னாள் பிரசாரகர் சுனில் ஜோஷியை பைக்கில் வந்த மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா உள்பட 7 பேர் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் கடந்த 2017ல் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கை தூசி தட்டி மீண்டும் விசாரணைக்கு எடுக்க, மபி.யில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது. இது குறித்து மாநில சட்ட அமைச்சர் பி.சி. சர்மா கூறுகையில், ``சுனில் ஜோஷி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. வழக்கு தொடர்பான விவரங்களை விரைவில் சமர்ப்பிக்கும்படி திவாஸ் கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

 

இது தொடர்பாக மாநில பாஜ மூத்த தலைவர் கூறுகையில், ``தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் போபால் மக்களவைத் தொகுதியில் பிரக்யா வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளதால், அவர் மீது அரசியல் பழிவாங்கும் செயலாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,’’ என்றார்.

Related Stories: