×

பானி புயல் பாதிப்பை சீரமைக்க வெளிநாட்டு இந்தியர்களிடம் நன்ெகாடை கேட்கிறது ஒடிசா

புவனேஸ்வர்: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்து நன்கொடையை வரவேற்பதாக ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் கடலோர மாவட்டங்களை கடந்த 3ம் தேதி பானி புயல் தாக்கியது. இதில், 64 பேர் பலியாயினர். மணிக்கு 240 கிமீ வேகத்தில் வீசிய காற்றினால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின. ஆயிரக்கணக்கான மரங்கள், நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. புயலின் கோரப்பிடியில் இருந்து ஏறக்குறைய 13 மாவட்டங்கள் மீண்டுள்ள நிலையில், புனித நகரான பூரி கடுமையாக பாதிக்கப்பட்டதால் இன்னும் மீளவில்லை. புயல் கரை கடந்து 18 நாட்களான நிலையிலும், இங்கு 19 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பானி புயலினால் ஏற்பட்ட பாதிப்பு ₹12,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களில் மட்டும்  மீட்பு, சீரமைப்பு பணிகளுக்கென மாநில அரசு ₹6 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள், தனி நபர்களிடம் இருந்து இதுவரை ₹200 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. மத்திய அரசு உடனடி புயல் நிவாரண நிதியாக ₹1,314 கோடி அளித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஒடிசா முதல்வர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், `பானி புயல் நிவாரணப் பணிகளுக்காக வெளிநாட்டினர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், என்ஆர்ஐ.க்களிடம் இருந்து நன்கொடை வரவேற்கப்படுகிறது. நன்கொடைகளை cmrfodisha.gov.in/donation/onlinedonation.php என்ற இணைய முகவரிகளில் செலுத்தலாம். இந்த சிறிய உதவி, மாநிலம் மீண்டு எழவும், பலரது வாழ்க்கைக்கும் உதவும்’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Bani ,storm ,Indian Indians ,Odisha , Bani Storm, Foreign, Nuggada, Orissa
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...