கெம்பிளாஸ்ட் சன்மார் ஊழியர்கள் பிரச்னைக்கு ஒரு மாதத்தில் தீர்வு

சென்னை: சேலம் கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தில் 77 பயிற்சி ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான பிரச்னையை ஒரு மாதத்தில் முடித்து வைக்குமாறு சேலம் உதவி தொழிலாளர் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் கெமிக்கல்ஸ் அண்ட் பிளாஸ்டிக் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தில் உள்ளிருப்பு பயிற்சி ஊழியர்கள் (இன்டர்ன்ஷிப்) 77 பேரை நிறுவனம் கடந்த ஜனவரி 9ம் தேதி பணி நீக்கம் செய்தது. அவர்கள் தொழிற்சங்கம் நடத்திய தேசிய அளவிலான போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, விதிமுறைகளுக்கு முரணாக 77 பேரை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, ஊழியர்கள் தொடர்பான பிரச்னை சேலம் உதவி தொழிலாளர் ஆணையரின் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 9ம் தேதி 77 பேரை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணியாளர்கள் 36 மாதங்கள் பணியை முடிக்காத நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்ற காரணத்தை கூறி அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். எனவே, விதிகளுக்கு முரணான இந்த பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.ரவீந்திரன் ஆஜராகி, எங்கள் நிறுவனம் தனியார் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் உத்தரவை எதிர்த்து ரிட் வழக்கு தொடரமுடியாது. தொழிலாளர் தீர்ப்பாயத்தில்தான் முறையிட முடியும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் தொடர்பான பிரச்னையை சேலம் உதவி தொழிலாளர் ஆணையர் ஒரு மாதத்திற்குள் முடித்து வைக்க வேண்டும். தொழிலாளர் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை சம்பந்தப்பட்ட  தொழிலாளர் தீர்ப்பாயம் 6 மாதங்களுக்குள் முடித்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: