8 வழிச்சாலைக்கு 7% பேர் மட்டுமே எதிர்ப்பா? முதல்வருக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

சேலம்: சேலம்-சென்னை 8வழிச்சாலை திட்டத்திற்கு 7 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக முதல்வர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சேலத்தில் அளித்த பேட்டியில் ‘‘8 வழிசாலை திட்டத்திற்கு 7 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களும் நாட்டின் நலனை கருதி தாங்களாகவே நிலத்தை ஒப்படைக்க வேண்டும்,’’ என்றார். இது 8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில், சேலம் மாவட்ட உழவர் உற்பத்தியாளர்கள் பேரியக்கம் சார்பில் ராமலிங்கபுரம், நாழிக்கல்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ராமலிங்கம்புரம் கோவில் அருகே திரண்டனர். அங்குள்ள மரவள்ளிக்கிழங்கு காட்டில் இறங்கி, கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்த விவசாயி நாராயணன் கூறுகையில், 8வழிச்சாலை திட்டத்திற்கு 100 சதவீதம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல்வர் 7 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறுவது, முற்றிலும் பொய்யான தகவல். ஏற்கனவே, சேலத்திலிருந்து சென்னைக்கு செல்ல மூன்று சாலைகள் உள்ளது. அப்படி இருக்கும்போது பல ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து இந்த சாலை எதற்காக போடப்படுகிறது.

விவசாயத்தை அழித்துதான் வளர்ச்சியை இந்த நாட்டு மக்களுக்கு பெற்றுத்தரவேண்டுமா? தமிழக அரசு எட்டு வழிச்சாலை குறித்த நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஒரு சர்வாதிகார ஆட்சியை போன்று செயல்பட்டு வருகிறது. இந்த சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டியலை நாங்கள் தருகிறோம். நீங்களும் பட்டியல் கொடுங்கள். இவர்கள் எல்லாம் ஆதரவு கொடுத்தார்கள் என வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்றார்.

Related Stories: