சீலிடப்பட்ட பெட்டியில் நேரில் செலுத்த முடியாது தபாலில் வரும் வாக்குகள் மட்டுமே ஏற்கப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவு

திருவண்ணாமலை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது, காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில், தனி அறையில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு தபால் வாக்குகளையும் தனித்தனியே பிரித்து, அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியின் சான்றொப்பம் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்த பிறகே, தபால் வாக்கு எண்ணிக்கைக்கு தகுதியானதாக ஏற்கப்படும்.

அதன்பிறகு, தபால் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் 25 எண்ணிக்கையில் கட்டுகளாக கட்டப்படும். பின்னர், அவை பிரிக்கப்பட்டு சின்னம் அடிப்படையில் ஒவ்வொன்றாக எண்ணப்படும். தபால் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கினாலும், அதன் முடிவுகளை உடனே அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை நடந்து முடிந்து, இறுதிச்சுற்றுக்கு முன்பாக, தபால் வாக்கு எண்ணிக்கை விபரத்தை அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், தபால் வாக்குகளை வாக்கு எண்ணும் மையத்தில் சீலிடப்பட்ட பெட்டியில் செலுத்துவதற்கான வாய்ப்பு, கடந்த பொதுத்தேர்தல் வரை வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை சீலிடப்பட்ட பெட்டியில் தபால் வாக்குச்சீட்டுகளை நேரில் செலுத்த அனுமதியில்லை.

எனவே, தபால் வாக்குகள் தபால் மூலம் மட்டுமே பெறப்படும். காலை 7 மணிக்குள் தபால் மூலம் வரும் தபால் வாக்குகள் எண்ணிக்கைக்கு ஏற்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று (புதன்) அஞ்சலகங்களில் செலுத்தினால், நாளை காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகளை சேர்ப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அஞ்சல் துறை செய்திருக்கிறது. அதற்காக, அஞ்சலகங்களில் தபால் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று இரவு பணி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: