×

அரசு கட்டிட பணிக்காக புழல் ஏரி உபரிநீர் கால்வாய் கரை உடைத்து மண் திருட்டு: 3 வாகனங்கள் சிக்கின

புழல்: புழல் ஏரி உபரிநீர் கால்வாய் கரை உடைத்து மண் திருடிய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் கிராமத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது 2008ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்பட்டது. இதை அப்போது அமைச்சராக இருந்த கேபிபி.சாமி துவக்கி வைத்தார். ஆனால் போதிய இட வசதி இல்லாததால் அங்குள்ள சமுதாய கூடத்தில் இன்றுவரை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் விளாங்காடுபாக்கம் கல்மேடு அருகில் பொதுப்பணித்துறை சார்பில், சுகாதார நிலையத்துக்காக ₹67 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் மண் நிரப்புவதற்காக அருகிலுள்ள புழல் ஏரியின் உபரிநீர் கால்வாய் கரையை உடைத்து அந்த மண்ணை சட்ட விரோதமாக எடுத்து பயன்படுத்தி வந்தனர்.  இதனை அறிந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சரவணன் சம்பந்தப்பட்ட பொன்னேரி கோட்டாட்சியர், பொன்னேரி தாசில்தார், சோழவரம் வருவாய் ஆய்வாளர், விளாங்காடுபாக்கம் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு புகாரளித்தார். தகவலறிந்து அதிகாரிகள் விரைந்து வந்து உபரிநீர் கரையில் மண் எடுத்த 3 வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். 


Tags : Government building work, puzhal lake, surplus canal, soil theft
× RELATED கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக...