உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர்

லண்டன்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உத்தேச அணியில் இடம் பெறாத ஆல் ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் (24 வயது) தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் நகரில் பிறந்த ஆர்ச்சர், கடந்த ஜனவரியில் தான் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதி பெற்றார்.

இங்கிலாந்து அணிக்காக இதுவரை 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ள ஆர்ச்சர், உலக கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பார்படாஸ் யு-19, வெஸ்ட் இண்டீஸ் யு-19, சசெக்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். இவருடன் லயம் டாவ்சன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஜோ டென்லி, டேவிட் வில்லி, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி. சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 11 இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர்களில் 10ல் வென்றுள்ளதுடன் ஒரு தொடரை டிரா செய்து ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் மே 30ம் தேதி நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சம பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இங்கிலாந்து அணி: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டாம் கரன், லயம் டாவ்சன், லயம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Related Stories: