முதுமலை புலிகள் காப்பகத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள்வட்ட பகுதிகளில் தாவர உண்ணிகள் மற்றும் ஊன் உண்ணிகள் குறித்த பருவமழைக்கு முந்தைய கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் உத்தரவின்பேரில் இணை இயக்குனர் செண்பகபிரியா மேற்பார்வையில் மே 20ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை 7 நாட்கள் விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகின்றன. முன்னதாக களப்  பணிகளில் ஈடுபடும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நேற்று தெப்பக்காடு யானைகள் முகாமில் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.  வனச்சரகர்கள்  தயானந்த், ராஜேந்திரன், சிவகுமார், விஜய் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்குப்  பின் கணக்கெடுப்பு உபகரணங்களான ஜிபிஎஸ் கருவிகள், ஸ்மார்ட் போன்கள், ரேஞ்ச் பைண்டர்கள், டேப்புகள், கயிறு  உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு  கணக்கெடுப்பு நடைபெற உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இவர்கள் 36   குழுக்களாக பிரிந்து இன்று காலை 6 மணி முதல் கணக்கெடுப்பு பணிகளை துவக்கினர்.

நேரடி கண்காணிப்பு, கால் தடங்கள், எச்சம், மரங்களில் உள்ள நககீறல்கள்   உள்ளிட்ட பல்வேறு தடயங்களைக் கொண்டு இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. கடந்த 2 வருடங்களாக முதுமலை புலிகள் காப்பகத்தில் ஊடாக  தெற்கு  வடக்காக செல்லும் மாயாற்றின் மேற்குப் பகுதி உள்வட்ட பகுதியாகவும் கிழக்குப்பகுதி வெளிவட்ட பகுதியாகவும் வரையறுக்கப்பட்டு இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், வனப்பகுதிகளில் நல்ல மழை பெய்து பசுமை திரும்பி  உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: