மே - 21 இன்று தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம் : தீவிரவாதத்தை வேரறுப்போம்...

இலங்கையில் தேவாலயங்கள் உட்பட பல இடங்களில் வெடிகுண்டுகள் தாக்குதல்... 250க்கும் மேற்பட்டோர் பலி... என்ற செய்திகளை கேட்டதும் மனம் பதறுகிறோம். இன்னும் கூட படுகாயங்களால் பலர் அவதிப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தீவிரவாதத்தை பொறுத்தவரை எங்கு நடந்தாலும், அது வேரறுக்கப்பட வேண்டியவை என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தமிழகத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்த நாளான இன்று (மே 21), தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினமாக நாம் அனுசரித்து வருகிறோம்.

மே 21, 1991... மறக்க முடியுமா இந்த நாளை? அன்றுதான் தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி, தற்கொலைப்படையினரின் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உடல் சிதறி மரணமடைந்தார். ஒட்டுமொத்த இந்தியாவை மிரள வைத்த இந்த சம்பவத்திற்கு பிறகு அடுத்து வந்த வி.பி.சிங் அரசு, மே 21ம் தேதியை தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்தது.

நமது காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலில் 44 துணை ராணுவப்படையினர் வீரமரணம் அடைந்தனர். உலகமெங்கும் ஏதாவது ஒரு நாட்டில், தீவிரவாத சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வாகவே மாறி விட்டன. இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் திணறி வருகின்றன. ஒவ்வொரு தீவிரவாத இயக்கமும், அவர்களுக்குள் கொள்கை ஒன்றை நிர்ணயித்து செயல்படுகின்றன. ஆனால், அதற்காக பலியிடப்படும் உயிர்கள், ரணப்பட்டு கிடப்பவர்களின் குடும்பங்களுக்கு யாருமே ஆறுதல் கூற முடிவதில்லை.

பொதுச்சொத்துக்கள் விரயமாதல், தாக்குதலால் அந்த நாட்டில் ஏற்படும் பொருளாதார சரிவு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு, அத்யாவசிய பொருட்களின் விலையேற்றம்... இப்படி பல விஷயங்கள் ஒரு தீவிரவாத தாக்குதலால் ஏற்படுகின்றன. தீவிரவாதிகளின் வெறியாட்டத்தில் உயிரிழந்த ஒரு குழந்தையின் கையை மட்டும், படம் பிடித்து ஒரு போட்டோகிராபர் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அதை பார்த்து ஒட்டுமொத்த உலகமே அழுது தீர்த்தது. வெடிகுண்டுகளுக்கு தெரியுமா? நாம்... பொசுக்கி பார்ப்பது ஒரு இளம் மொட்டைத்தான் அன்று. இப்படி தீவிரவாதத்தால் இன்னும் எத்தனை உயிர்களைத்தான் பலியிடப் போகிறோம். இனியாவது, தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டிய பணிகளை உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இளம் வயது குற்றவாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

அவர்களது ஆரம்ப வயது 14 என அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்ளை, கொலை என துவங்கும் இவர்களது வன்முறை கலந்த வாழ்க்கை, பின்னர் தீவிரவாத செயல்களுக்கு அடிகோலுகின்றன. இனியாவது, தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகள், மத்திய, மாநில அரசுகள் சிறப்புத்திட்டத்தை வகுக்க வேண்டும். தீவிரவாதத்தின் தீவிரம் ஒழிக்கப்பட வேண்டும். அதை இந்த தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினத்தில் நாம் உறுதிமொழியாக கொள்வோம்.

Related Stories: