×

விவிபேட் இயந்திரத்தில் ஒப்புகைசீட்டுகளை எண்ணும் போது முகவர்களை அனுமதிக்க வேண்டும்: திமுக மனு

சென்னை: வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு- விடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மே-23ம் தேதியன்று வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 43 மையங்களில் மே 23ம் தேதி(வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையங்களில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் ஆகியோர் அமர்ந்து ஓட்டுக்களை எண்ணுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் முகவர்களிடம் மின்னணு இயந்திரங்களை காட்டிய பின்னரே ஒட்டு எண்ணும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெறும் என்பதால், 10% அளவுக்கு சரிபார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுகவின் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சத்யபிரதா சாஹு- வை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நம்பகத்தன்மையோடும், வெளிப்படைத்தன்மையாகயும் இருக்க வேண்டும் என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒப்புகைசீட்டு சரிபார்க்கும் போதும் முகவர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, மே 23ம் தேதியன்று 17 சி என்ற படிவத்தை வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய 17 சி படிவம் முகவர்களுக்கு வழங்கப்படும் என தேர்தல் அதிகாரி கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் அதிகாரியிடம் வைத்துள்ளதாக கூறினார்.

Tags : Agents ,DMK , Agreement number, Agents, Votes, DMK, Complaint petition
× RELATED இலங்கைக்கு படகு மூலம் அனுப்ப முயற்சி:...