இந்தியாவை பைக்கில் சுற்றும் சித்த மருத்துவர் அடுத்த தலைமுறை நலன்கருதி நீர் நிலைகளை மீட்டெடுங்கள்

நெல்லை :  அடுத்த தலைமுறையினர் நலன் கருதி நீர் நிலைகளை மீட்டெடுக்க அனைவரும் பாடுபட வலியுறுத்தி இந்தியா முழுவதும் பைக்கில் வலம் வரும் திருவாரூர் சித்த மருத்துவர் நெல்லையில் பிரசாரம் செய்தார். திருவாரூர் மாவட்டம், இஞ்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைபாலகுரு (47). இவர் அங்கு பாரம்பரிய சித்த மருத்துவமும், பஞ்சகர்மா மருத்துவமும் செய்து வருகிறார். இந்தியாவில் நீர்நிலைகள், நீராதாரம் குறைந்து வருவதை தடுக்கவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் வலியுறுத்தி கடந்த பிப்ரவரி கடைசி வாரத்தில் பைக்கில் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கினார். ஆங்காங்கே வழி நெடுகிலும் துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஒலி பெருக்கி மூலமும் பிரசாரமும் செய்து வருகிறார்.

கடலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுவை, வேளாங்கண்ணி, ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு சென்றார். அங்கிருந்து இன்று நெல்லைக்கு வந்தார்.  இதையடுத்து மதுரை, திருச்சி, வேலூர், அரக்கோணம் வழியாக ஆந்திரா, விஜயவாடா செல்கிறார். தொடர்ந்து ஜூலை மாதம் ஜம்மு காஷ்மீர், அமர்நாத் பகுதிகளுக்கும் செல்கிறார்.

 அவர் கூறுகையில், இந்தியா முழுவதும் மழை வளம் குறைந்து வருகிறது. நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. நீர்நிலையில் உள்ள மண் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதே நிலை நீடித்தால் எதிர்கால தலைமுறையினருக்கு தண்ணீர் கேள்விக்குறியாகிவிடும். எனவே நீர் நிலைகளை மீட்க அனைவரும் ஒன்றுபட்டு முயற்சிக்க வலியுறுத்தி இந்த பிரசார பயணத்தை தொடர்கிறேன். வடமாநிலங்கள் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ள நான் இந்த ஆண்டு முடிவில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவேன் என்றார்.

Related Stories: