அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை

* கேள்விக்குறியான கல்வி தரம்

* குடிநீர்,கழிவறை இல்லை

சாயல்குடி :  முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஒன்றியங்களிலுள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல், கல்வி திறனை மேம்படுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கிராமபுற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 90 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 18 அரசு நடுநிலைப் பள்ளிகள், 10க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை பள்ளிகள், 7 அரசு மேல்நிலை பள்ளிகளும், கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 127 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள், 33 அரசு நடுநிலை பள்ளிகள் 10க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை பள்ளிகள், 8 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

இவற்றுள் பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகள் இருந்தும், கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டதால் கழிவறை கட்டிடங்களில் கதவுகள், கோப்பைகள் மற்றும் செப்டிக் டேங்க் உள்ளிட்டவை சேதமடைந்து கிடக்கிறது. கழிவறைக்குள் சீமை கருவேல மரங்களும் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். மாணவிகள் வெளியில் செல்ல முடியாமல் பள்ளிக்கு வரும் காலை முதல் மாலை வரை பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தரமற்று கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களில் மேற்கூரை, பக்கவாட்டு மற்றும் தரைதளம் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் எப்போது சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழும் என்ற ஒருவித பயத்துடன் வகுப்புகளில் இருந்து வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி வளாகத்திற்குள் வரும் கால்நடைகளால் இடையூறும், சிதறி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடும் நிலவி வருகிறது.

மேலும் கடலாடி, முதுகுளத்தூர் பகுதிக்கு முறையாக காவிரி கூட்டு குடிநீர் வருவது கிடையாது. பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் போர்வெல்களிலும் உப்புத்தண்ணீரே வருகிறது. இதனால் குடிதண்ணீர் வசதியில்லாததால், மாணவர்கள் வெளியிலிருக்கும் கடைகளுக்கும், வீடுகளுக்கும் தண்ணீர் கேட்டு நிற்கும் அவலநிலை உள்ளது. பள்ளிகளில் இருந்த காலியிடங்களில் புதிய வகுப்பறைகளை கட்டி விட்டதால் விளையாட்டு மைதானங்கள் இன்றி மாணவர்கள் விளையாட முடியவில்லை.

விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் கல்வி மாவட்ட அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்களே வெற்றி பெற்று வருகின்றனர். இதனால் கிராமபுற மாணவர்களில் விளையாட்டு தனித்திறன் முடக்கப்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் லேப்டாப்கள், கணிப்பொறிகள் வழங்கப்பட்டது. இவற்றை பயன்படுத்த பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தெரியாததால், அவை பயன்பாடின்றி பழுதடைந்து கிடக்கிறது. சில பள்ளிகளில் கணிப்பொறிகள், லேப்டாப்கள் மாயமாகியும் உள்ளது.

செயல்வழி கற்றல் முறையில் பாடம் நடத்த அரசு வழங்கிய தொலைக்காட்சி பெட்டிகள், டி.வி.டி பிளேயர்கள், புரொஷக்டர்கள், கணித உபகரண பொருட்கள் போன்றவை பயன்பாடின்றி கிடப்பதால் மாணவர்களுக்கு புதிய தொழிற் நுட்பம் சார்ந்த முறையில் கல்வி கற்க முடியவில்லை. தற்போது அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் 12 வகை உபகரணங்களில் சில தரமற்று இருப்பதால் வாங்கிய சில நாட்களுக்கு பிறகு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.  மேலும் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு முறையாக வழங்குவது கிடையாது. அதிகாரிகள் ஆய்வு செய்யாததால், முட்டைகள் பாதியளவு மட்டுமே வழங்கப்படுகிறது.

சாப்பிடுவதற்கு மையங்களில் இடமில்லாமல் வகுப்பறைகள் அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பிறகு சாப்பிட்ட கழிவு பொருட்களுடன் வகுப்பறைக்குள் அமர்ந்து பாடம் பயிலும் அவலநிலை உள்ளது. மையங்களில் குடிப்பதற்கும், பாத்திரங்களை கழுவுவதற்கும் தண்ணீர் கிடையாது. இதனால் உள்ளூர் மாணவர்கள் வீடுகளுக்கும், வெளியூர் மாணவர்கள் பெரும்பாலானோர் மதிய உணவு பள்ளிக்கு கொண்டு வந்து சாப்பிடும் நிலை உள்ளது. அரசு பள்ளிகளின் தொடர்ந்து நடந்து வரும். இதுபோன்ற அவலநிலைகளால் கூலி தொழிலாளர்கள் கூட, வறுமையை பொருட்படுத்தாமல் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்த்து வருகின்றனர்.

இதனால் கிராமப்புற பள்ளிகளில் ஆண்டிற்காண்டு மாணவர் சேர்க்கை குறைந்து, பள்ளிகளை மூடி வரும் நிலை உள்ளது. எனவே  கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்க சில நாட்களே உள்ள நிலையில் முதுகுளத்தூர், கடலாடி பகுதி அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, புதிய அறிவியல் தொழில் நுட்பத்தில் பாடம் கற்பித்து, தரமான கல்வியை வழங்கினால் மட்டுமே இன்று இருக்க கூடிய நீட் போன்ற தகுதி தேர்வுகளை துணிச்சலுடன் சந்திக்க நேரிடும். விளையாட்டு திறனுடன் கூடிய தரமான கல்வியை வழங்கி கிராமபுற மாணவர்களுக்கு வளமான எதிர்காலத்தை  உருவாக்கி கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: