தமிழக-கர்நாடக எல்லையில் விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தைப்புலி: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள  கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று கிராமத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் சுற்றி திரிந்தது. குடியிருப்புக்குள் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தமிழக-கர்நாடக எல்லையில் தாளவாடியை அடுத்துள்ள ஒன்னல்லி கிராமத்தில் சிறுத்தைப்புலி  குடியிருப்புக்குள் சுற்றி வந்தது.  சிறுத்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.

அதன் தலையில் இரத்தம் சொட்டுவதை கண்ட பொதுமக்கள் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.  தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தைப்புலியை  பிடித்தனர். இதனையடுத்து அந்த சிறுத்தைப்புலியை மேல்சிகிச்சைக்காக மைசூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து பேசிய கால்நடை மருத்துவர்கள்,வனவிலங்குகள் சண்டையிட்டு கொள்ளும் போது காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும் உரிய சிகிச்சை அளித்தப் பின் சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும் வனத்துறையினர் கூறியிருக்கின்றனர்.


× RELATED வால்பாறை எஸ்டேட்டில் புலி நடமாட்டம்