×

நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் விழாததால் கொல்லிமலை வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

சேந்தமங்கலம் : கொல்லிமலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க கொல்லிமலைக்கு சுற்றுலா வருவோர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, வாசலூர் பட்டி படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொழுது போக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நாள் முதலே கொல்லிமலைக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிய குறுகிய நாட்களே உள்ளதால் குடும்பம் குடும்பமாக கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். சுமார் 300அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் மூலிகை கலந்து வரும் நீரில் குளித்தால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்பது ஐதீகமாக உள்ளது. ஆனால், கொல்லிமலை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக குறைந்த அளவிலேயே மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நம்ம அருவி, மாசிலா அருவி தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது. இதனால், வேறு வழியின்றி சுற்றுலா பயணிகள் குறைந்த அளவு தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து விட்டுச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், ஆண்டு முழுவதும் ஒரே சீராக சுற்றுலா பயணிகள் வரக்கூடிய இடமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. மழை மற்றும் குளிர் காலங்களில் மலை முகடுகளை தழுவிச்சல்லும் மேகக்கூட்டங்களை கண்டு ரசிப்பதற்காக ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்வர்.

அப்போது, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டும் சமயங்களில் குளிக்க தடை விதிக்கப்படும். தற்போது, கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், கோடை மழையும் ஏமாற்றியதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அருவிகளில் குளிக்கலாம் என ஆசையுடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

Tags : Kollamalai , Kollimalai ,Water Falls,tourist ,basic facilities
× RELATED விஸ்வரூபம் எடுக்கும் குழந்தைகள்...