துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பேரணி, அமைதி ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு குமரெட்டியாபுரம் பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தை துவக்கினர். இந்த போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில் அருகில் உள்ள பண்டாரம்பட்டி, மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 கிராமங்களுக்கும் பரவியது.

99 நாட்களை கடந்த நிலையில் 100வது நாளில் போராட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானித்தனர்.  இந்நிலையில் போராட்டக் குழுவினரை மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதில் போராட்ட குழுவில் ஒரு பகுதியினர் மட்டும் கலந்து கொண்டு விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே ஒருநாள் முழுவதும் தர்ணா நடத்திக் கொள்வதாக உறுதியளித்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.  இந்த துப்பாக்கி சூட்டில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கிளாஸ்டன், மினிசகாயபுரத்தைச் சேர்ந்த ஸ்நோலின், தாமோதரநகரைச் சேர்ந்த மணிராஜ், குறுக்குசாலை தமிழரசன், மாசிலாமணிபுரம் சண்முகம், அன்னை வேளாங்கன்னிநகர் அந்தோணிசெல்வராஜ், புஷ்பாநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், மில்லர்புரம் கார்த்திகேயன், திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி, சிவந்தாகுளம் ரோடு கார்த்திக், மாப்பிள்ளையூரணி காளியப்பன், உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன், சாயர்புரம் செல்வசேகர் ஆகிய 13 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒரு சிலர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இந்த ஒருநபர் ஆணையம் தற்போது வரை 11 கட்டங்களாக 340க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் 18ம் தேதி 12ம் கட்ட விசாரணை நடத்த உள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும்  சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

ஆனால்

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் 15 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சி.பி.ஐ. எஸ்பி சரவணன் தலைமையில் டிஎஸ்பி  ரவி உள்ளிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை அவ்வப்போது டெல்லியில் உள்ள தலைமையகத்தில் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அர்ச்சுணன் புகாரின் பேரில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, காவல்துறை மற்றும் வருவாய்துறையை சேர்ந்த நபர்கள் என குறிப்பிடப்பட்டு அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

 இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து நாளையுடன் (22ம் தேதி) ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை தூத்துக்குடி பெல் ஹோட்டலில் ஒரு தரப்பினர் நினைவஞ்சலி கூட்டம் நடத்துகின்றனர். இதில் 500 பேர் கலந்து கொள்ளலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.

 மற்றொரு தரப்பினர் தாங்கள் போராட்டம் நடத்திய பகுதிகளிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளனர். இருப்பினும் இந்த நினைவஞ்சலி கூட்டம், பேரணி, அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்த நிலையில் சட்டம் ஓழுங்கு மற்றும் பொது அமைதியை காரணம் காட்டி போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டும் அஞ்சலி செலுத்த திட்டமிட்டவர்கள் மத்தியில் இருந்து வெளிப்பட்டுள்ளது.

இதையொட்டி தூத்துக்குடி நகர் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசார் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அமைதிக்கூட்டம் சிறு பிரச்னைக்கும் இடம் தரக்கூடாது

alignment=

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் நாளை (22ம் தேதி) அனுசரிக்கப்பட இருப்பதை முன்னிட்டு எஸ்பி தலைமையில் நேற்று அமைதிக்கூட்டம் நடந்தது.  தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு எஸ்பி முரளிராம்பா தலைமை வகித்தார். ஏடிஎஸ்பிகள் பொன்ராமு, வேதரத்தினம், சப்-கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் கலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள், முத்துக்குளியல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தூத்துக்குடி ஊர் பிரமுகர்கள், பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், சமுதாய பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எஸ்பி முரளிராம்பா பேசியதாவது: கடந்த 24.05.2018 அன்று நான் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றேன். அன்று முதல் இன்று வரை தூத்துக்குடி மாநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித பிரச்னையும் வரவில்லை. இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த தூத்துக்குடி மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோல் நாளை (22ம்தேதி) எவ்வித சிறிய பிரச்னைகள் கூட வராமல் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்டத்திற்குட்பட்டு உங்களுக்கு எந்த உதவியும், எந்த நேரத்திலும் செய்யத்தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். ஆலோசனை கூட்டத்தில், டவுன் டிஎஸ்பி பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், சிவசெந்தில்குமார், ரஞ்சித்குமார், ஜீன்குமார், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இன்று (21ம் தேதி) தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போலீசார், தனிப்பிரிவினர், தீயணைப்பு துறையினர், ஆயுதப்படையினர்  உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கலவரத்தடுப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கையாக 47 பேர் மீது வழக்குபதிவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பலியானவர்களின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி போராட்டக் குழுவினர் உள்ளிட்ட 47 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் வழக்குபதிவு செய்து ஆர்டிஓ முன்பு ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதனை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி நாளை தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள ஹோட்டலில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தவும், லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஆலயத்தில் திருப்பலியும் அங்கிருந்து நினைவு ஊர்வலமும் நடத்தப்பட உள்ளது. இதுதவிர மற்றொரு தரப்பினர் குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மடத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி நகர் மற்றும் புறநகரில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் போராட்ட குழுவினரில் முக்கிய நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 107வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அரசுக்கு எதிராக குற்றம் மற்றும் கலவரங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்து இடையூறாக நடக்க வாய்ப்புள்ளதாகவும், வரும் 6 மாத காலத்திற்கு அவர்களிடமிருந்து உறுதிமொழி பத்திரம் அல்லது பிணைய பத்திரம் ஏன் எழுதி பெறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான ஆர்டிஓ விசாரணைக்கு தூத்துக்குடி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் தூத்துக்குடி சிப்காட் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலையங்களில் 25 பேர் மீது வழக்கும், நகர் பகுதியில் உள்ள தென்பாகம், வடபாகம், மத்தியபாகம், தாளமுத்துநகர் பகுதி காவல் நிலையங்களில் 22 பேர் மீதும் என 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணைக்காக பலர் நேற்று தூத்துக்குடி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் சப்-கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் கலோன் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தார்.

Related Stories: