×

கங்கைகொண்டான் மான் பூங்காவில் 5 தொட்டிகளில் தடையற்ற குடிநீர் விநியோகம்

* பொதுமக்கள் பார்வையிட வாட்ச் டவர் அமைப்பு

நெல்லை : கோடை வெயில் கொளுத்துவதால் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் மான் பூங்காவில் வாழும் உயிரினங்களுக்கு 5 குடிநீர் தொட்டிகளில் தடையற்ற நீர் வழங்கப்படுகிறது. மேலும் உணவுக்காக உள்ளேயே புல் வளர்த்து பராமரிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் முதல் குறையாமல் கொளுத்துகிறது. குறிப்பாக கடந்த 2 வாரமாக வெயில் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளும் சிரமப்படுகின்றன.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் மான் பூங்கா இந்தியாவின் முதல் புள்ளிமான்கள் சரணாலயமாகும். 288.40 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த சரணாலயத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான்கள், நூற்றுக்கணக்கான மயில்கள், முயல்கள் மற்றும் உடும்பு உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளும், பறவைகளும் முகாமிட்டுள்ளன.
இந்த பூங்காவின் முகப்பு பகுதி நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்தும் நிலையில் சில மான்கள் அவ்வப்போது உடைந்த காம்பவுண்டு சுவர் வழியாக வெளியேறி வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் இறக்கின்றன.

alignment=


இந்த நிலையில் கோடை வெயிலால் தண்ணீர், உணவுக்கு மான்கள் சிரமப்படக்கூடாது, சரணாலயத்தை விட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக பூங்காவின் உள்பகுதியில் வெவ்வேறு இடங்களில் 5 பெரிய தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் தேவையான தண்ணீர் குறையாமல் தடையின்றி விடப்படுகிறது.  பூங்காவின் முகப்பு பகுதிக்கு அருகே உள்ள ஒரு பெரிய  கிணற்றில் தாமிரபரணி குடிநீர் நேரடியாக கொண்டு வரப்பட்டு எப்போதும் விழும் வகையில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இந்த நீர் குழாய் மூலம் 5 தொட்டிகள் உள்ள இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு தொட்டிகளில் நிரப்பப்படுகின்றன.

மேலும் மான்களுக்கு பசுமை புல் உணவும் தடையின்றி கிடைப்பதற்காக தலா ஒரு ஏக்கர் வீதம் 5 ஏக்கர் நிலங்கள் வெவ்வேறு பகுதிகளில் பராமரித்து புல் மற்றும் உணவு பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.  இதனால் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மான்கள் கூட்டமாக  வந்து புல் மற்றும் நீர் அருந்துகின்றன. வெயில் அதிகமாக இருப்பதால் பகல் நேரங்களிலும் நீர் தேடி மான்கள் நீர்தேக்க தொட்டிக்கு வருகை தருகின்றன. காயமடைந்த டயானா என்ற மான் உள்பட இரண்டு மான்களை வனத்துறையினர் தனியாக பராமரித்து வளர்க்கின்றனர்.

இந்த மான் பூங்காவை பொதுமக்கள் பார்வையிட வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பொதுமக்கள் நுழைய தடை செய்யப்பட்ட பகுதியான இங்கு பொதுமக்கள் குறிப்பிட்ட தூரம் வரை சென்று பார்க்க விரைவில் அனுமதி அளிக்கப்படஉள்ளது. இதற்காக ஒரு வாட்ச் டவரும் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு முகப்பு வாயில்கள் உள்ளதால் ஒரு நுழைவு வாயில் வழியாக சென்று மற்றொரு வாயில் வழியாக பொதுமக்கள் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்படஉள்ளது. பள்ளி மாணவ மாணவிகளும் அனுமதியுடன் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.

Tags : Gangaikondan Deer park , Gangaikondan ,Deer park ,water Tanks ,drinking water
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...