×

கடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்டதாகும். புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மேற்குப்பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளதாலும், வடக்குப் பகுதி கர்நாடக மாநிலத்திலுள்ள பிலிகிரி ரங்கசாமி வன உயிரின சரணாலயத்தை ஒட்டி இருப்பதாலும் இங்கு கர்நாடக மாநிலத்தில் இருந்தும் முதுமலை வனத்தில் இருந்து யானைகள் இடம் பெயர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு வருவது வழக்கம்.

  இந்நிலையில் தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் பள்ளங்கள், தடுப்பணைகள், வனக்குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர் வற்றி விட்டது. இதன் காரணமாக யானைகள் குடிநீருக்காக பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் உள்ள பவானி மற்றும் மாயாறு என இரண்டு ஆறுகளில் தண்ணீர் குடித்து விட்டு செல்கின்றன. நேற்று  காலை நீலகிரி கிழக்கு சரிவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டமாக பவானி ஆற்றை நோக்கி மெதுவாக நடந்து வந்தன. குட்டிகளுடன் வந்த யானைகள் ஒவ்வொன்றாக பவானி ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தன.

 இதில் சிறிது நேரம் பவானி ஆற்றில் தண்ணீர் குடித்து விளையாடி விட்டு பின்னர் மீண்டும் வந்த வழியே வனப்பகுதிக்கு சென்றன. பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மேய்ப்போர் யானைகள் நடமாட்டம் உள்ளதால் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags : Elephant Meeting ,Bhavani River ,drought , satyamangalam, elephant, drinking water, villages
× RELATED பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்