×

நெல்லையில் தொடரும் வறட்சி கடும் வெயிலால் கருகும் பூ செடிகள்

பணகுடி :  நெல்லை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பாசனத்திற்கு தண்ணீரின்றி மல்லிகை செடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஆவரைகுளம், பிள்ளையார் குடியிருப்பு, குமாரபுரம், யாக்கோபுரம், அழகனேரி, மதகனேரி, அம்பலவாணபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பூக்கள் சாகுபடி நடந்து வருகிறது.

இந்தாண்டு கடந்த சில மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயில் துவங்கியது முதலே அனலாக தகிக்கிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் வறண்டுள்ளதுடன் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீரின்றி பூச்செடிகள் கருகி வருகின்றன. சில பகுதிகளில் செடிகள் பச்சைப்பசேல் என காட்சியளித்தாலும் பூக்கள் பூக்கும்போதே கருகி விடுகின்றன. கடந்த 2 மாதங்களாக இதேநிலை நீடிப்பதாகவும், இதனால் பூ சாகுபடியில் கடும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து பிள்ளையார் குடியிருப்பை சேர்ந்த விவசாயி கணேசன் என்ற குட்டி கூறியதாவது: எங்கள் பகுதியில் மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது அடிக்கும் வெயிலுக்கு செடியிலேயே பூக்கள் கருகி வருகிறது. பல லட்ச ரூபாய் செலவழித்து பயிரிடப்பட்ட நிலையில், தற்போது ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ வரையே கிடைக்கிறது.

திருமணம் உள்ளிட்ட விழாக்கால சீசன் என்பதால், பூக்கள் விளைச்சலின்றி செலவை கூட திருப்பி எடுக்க முடியுமா? என தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் பூ சாகுபடியை கைவிட்டு வேறு வேலைக்குத்தான் செல்ல வேண்டும். சிலர் விலைக்கு தண்ணீரை வாங்கியும் பூ செடிகளை காப்பாற்றி வருகின்றனர், என்றார்.  கடந்த காலங்களில் கோடை சீசனில் இப்பகுதியில் இருந்து மூட்டை, மூட்டையாக பூக்கள் தோவாளை சந்தைக்கு விற்பனை செல்லும். ஆனால் இந்தாண்டு சிறிய பையிலேயே எடுத்துச் செல்கின்றனர். விளைச்சல் இல்லாததால் சிறியரக மல்லிகையும் போதிய விலையின்றி கிலோ ரூ.100 முதல் 200க்கே விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : drought , Heavy drought,Tirunelveli , flower plants, panakudi
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!