×

பாஜக அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா?....... ஓபிஎஸ் விளக்கம்

சென்னை: பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது பற்றி கட்சித்தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து, பாஜ தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.  டெல்லியில் இன்று பாஜ கூட்டணி கட்சி தலைவர்களை கவுரவிக்கும் வகையில் பெரிய அளவில் விருந்து நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. விருந்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பாஜ கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால், அவரது புறப்பாடு கடைசி நேரத்தில் ரத்தானது.

இந்நிலையில் டெல்லி செல்வதற்கு முன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறியதாவது: பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது பற்றி கட்சித்தலைமை ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மே-23-ல் அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கு பின் அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி முடிவு செய்யப்படும். பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான கருத்துக்கணிப்புகள் மக்களின் முடிவை பிரதிபலிக்கிறது. கருத்துக்கணிப்புகளை கருத்து திணிப்பு என கூறுவது அவரவர் விருப்பம் என ஓபிஎஸ் கூறினார்.

Tags : AIADMK ,cabinet ,BJP , BJP, Cabinet, AIADMK, OPS
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...