கருத்து கணிப்பை ஒட்டியே தேர்தல் முடிவுகள் அமையும்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை

புதுடெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமையும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு மே 19ம் தேதியுடன் முடிந்தது. இதனை அடுத்து நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே நேற்று முன்தினம் இறுதிக்கட்ட தேர்தல் முடிந்த உடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் பாஜ சராசரியாக 300 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க கூடும் என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, `தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின் தகவல் என்ற பெயரில் வலைதளத்தில் பதிவிட்ட விவரம் வருமாறு:

நம்மில் பலர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சரியானவையா, துல்லியமானவையா என்ற தேவையற்ற வீண் சச்சரவுகளில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கருத்து கணிப்புகள் ஒரே விஷயத்தை கூறுகின்றன என்றால், தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அதனை ஒட்டியேதான் அமையும். கருத்து கணிப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேலை இல்லை.

அதனால் அவற்றில் முறைகேடு நடப்பதாக, இல்லாத ஒன்றை கூறிய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பொய்யாகும். கடந்த 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்திய ஜனநாயகம் நல்லதொரு பக்குவநிலை அடைந்திருப்பதை காண முடிகிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு முன் தேசத்தின் நலனை மக்கள் முன்னிறுத்தி உள்ளனர். இது போன்ற சிந்தனை கொண்ட மக்கள் வாக்களிக்கும் போது அவர்கள் ஒரே திசையை நோக்கி பயணிக்கின்றனர். அதுவே மாபெரும் அலையாக உருவாகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: